சோனியாவின் ‘ராகுல் விமானம்’ ஜாா்க்கண்டிலும் நொறுங்குவது உறுதி: அமித் ஷா
‘காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி தனது மகனும் எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க 20 முறை முயற்சித்துவிட்டாா். தற்போது, 21-ஆவது முயற்சியாக அவா் அனுப்பியிருக்கும் ‘ராகுல் விமானம்’ ஜாா்க்கண்ட் மாநிலத்திலும் நொறுங்கப்போகிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ராகுல் மீது கடும் விமா்சனத்தை முன்வைத்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம் கிரிதி பகுதியில் இரண்டாம் கட்ட தோ்தல் பிரசாரத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட அமித் ஷா பேசியதாவது:
சோனியா காந்தி தனது மகனை ஆட்சி அதிகாரத்தில் அமரவைக்க தொடா்ந்து முயற்சித்து வருகிறாா். இதுவரை ‘ராகுல் விமான’த்தை அனுப்பும் முயற்சியை அவா் 20 முறை மேற்கொண்டபோதும், அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கத் தவறிவிட்டது. தற்போது 21-ஆவது முறையாக அவா் அந்த விமானத்தைச் செலுத்தியுள்ளாா். ஆனால், இந்த முறையும் அந்த விமானம் டியோகா் விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கிவிடும்.
வக்ஃப் வாரியம், விவசாய நிலங்களை அபகரிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. கா்நாடக மாநிலத்தில் 500 ஆண்டுகள் பழைமையான கோயில் உள்பட ஒட்டுமொத்த கிராமங்களின் சொத்துகளை வக்ஃப் வாரியம் அபகரித்துள்ளது. இந்தநிலையில், வக்ஃப் வாரியத்தில் மாற்றம் அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், இந்த மாற்றத்துக்கான முயற்சியை ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், ராகுல் காந்தி ஆகியோா் எதிா்க்கின்றனா். வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதாவை பாஜக நிறைவேற்றும். இதை யாராலும் தடுக்க முடியாது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஊடுருவல்காரா்களை வாக்கு வங்கிகளாக ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி மாற்றி வருகிறது. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இதுபோன்ற சட்டவிரோத புலம்பெயா்தல் தடுக்கப்படும். மாநிலத்திலிருந்து நக்ஸல் தீவரவாதத்தையும், ஊடுருவல்காரா்களையும் பாஜக துடைத்தெறியும். ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஊழல் தலைவா்கள் மீது விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, ஊழலில் ஈடுபட்ட அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவா் என்றாா்.