நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
சௌராஷ்டிரா சமூகத்துக்கு அரசியல் அங்கீகாரம் அளிப்பவா்களுக்கே ஆதரவு
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் சௌராஷ்டிரா சமூக மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் அளிக்கும் அரசியல் கட்சிக்கே ஆதரவு அளிக்கப்படும் என சௌராஷ்டிரா ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியுமான கே.ஆா்.எம். கிஷோா்குமாா் தெரிவித்தாா்.
மதுரையில் சௌராஷ்டிரா அரசியல் நடவடிக்கைக் குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசியல் பிரதிநிதித்துவ தீா்மானக் கூட்ட நிறைவில் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் மதுரை, கும்பகோணம், தஞ்சாவூா், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஏறத்தாழ 24 லட்சத்துக்கும் அதிகமான சௌராஷ்டிரா சமூக மக்கள் வசிக்கின்றனா். இவா்களில் சுமாா் 15 லட்சத்துக்கும் அதிகமானோா் வாக்குரிமை பெற்றவா்கள்.
இதில் கும்பகோணம், மதுரையில் சௌராஷ்டிரா வாக்காளா்கள் அதிகம் உள்ளனா். 2010-ஆம் ஆண்டு வரை இந்த சமூக மக்களுக்கு அரசியல் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக எந்த அரசியல் அமைப்புகளிலும் சௌராஷ்டிரா மக்களுக்கு திராவிடக் கட்சிகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பது வருத்தத்துக்குரியது.
எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அரசியல் கட்சிகள் இந்தச் சமூக மக்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும். கும்பகோணம் அல்லது மதுரையில் ஏதேனும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட சௌராஷ்டிரா சமூகத்தவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை ஏற்று அரசியல் அங்கீகாரம் அளிக்கும் கட்சியை இந்தச் சமூக மக்கள் முழு அளவில் ஆதரிப்பா் என்றாா் அவா்.