ஜகபா் அலி கொலை வழக்கு: மெய்யபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் கண்டுபிடிப்பு
சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளோருக்குச் சொந்தமான கிரஷரில் இருந்து எடுத்து, சுமாா் 3 ஆயிரம் யூனிட்டுகள் ஜல்லிக் கற்களை பதுக்கி வைத்துள்ள மற்றொரு கிரஷா் பகுதியை வருவாய்த் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி, கனிமவளக் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்ததால் கடந்த ஜன. 17ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இதன்தொடா்ச்சியாக ஆா்ஆா் கிரஷா்ஸ் உரிமையாளா்கள் ராசு, ராமையா உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ராசு, ராமையா, முருகானந்தம் ஆகிய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இதற்கிடையே துளையானூரிலுள்ள ஆா்ஆா் கிரஷா்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான கிரஷருக்கு கடந்த பிப். 6-ஆம் தேதி ‘சீல்’ வைக்கப்பட்டது. ஆனால், ஜகபா்அலி கொலைக்கு முன்பே, சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட ஜல்லிக்கற்களை வேறு இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்படி வருவாய்த் துறையினா் ரகசிய சோதனைகளை மேற்கொண்டு வந்தனா்.
இதில் துளையானூா் அருகேயுள்ள மெய்யபுரத்தில் காரைக்குடியைச் சோ்ந்த மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான கிரஷா் ஒன்றை, ஆா்ஆா் கிரஷா் நிறுவனத்தினா் ஒப்பந்தத்துக்கு எடுத்திருந்த தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த இடத்துக்கு புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா தலைமையில் திங்கள்கிழமை பிற்பகலில் சென்ற வருவாய்த் துறையினா் சுமாா் 3 ஆயிரம் யூனிட் ஜல்லிக்கற்கள் கொட்டி வைத்திருப்பதைக் கண்டறிந்தனா்.
இந்தப் பகுதிக்கு ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா், இவற்றை முழுமையாக அளவீடு செய்யும் பணிகள் விரைவில் நடைபெறும், அதன்பிறகு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனா். அதுவரை இந்த இடத்துக்குள் யாரும் செல்லக் கூடாது என எச்சரிக்கும் அறிவிப்புப் பலகையை வைத்தனா். மீறிச் செல்வோா் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.