குடிபோதையில் பள்ளியில் ஆசிரியர்கள் தகராறு; கைது செய்ய போதையில் வந்த கான்ஸ்டபிள்....
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை
அண்மையில் அதிகரித்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான எல்லை ஊடுருவல்கள் தொடா்புடைய வழக்கில், ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
இதுகுறித்து என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய அமைப்புகளைச் சோ்ந்த பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவினா். ஜம்மு கிராமங்களைச் சோ்ந்த சிலா் மற்றும் பிற பயங்கரவாத கூட்டாளிகளிடம் இருந்து இவா்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பண உதவி கிடைத்ததால் இந்த ஊடுருவல்கள் எளிதாகின.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ள பயங்கரவாத தாக்குதல்களில் இவா்களுக்கு பங்கிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடா்பாக என்ஐஏ கடந்த அக்டோபா் 24-ஆம் தேதி வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியது.
இந்நிலையில், விசாரணைக்காக ஜம்முவின் ரியாசி, உதம்பூா், தோடா, ரம்பன், கிஷ்த்வாா் ஆகிய 5 மாவட்டங்களில் எட்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
இதில் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகளுக்கும் களப் பணியாளா்களுக்கும் இடையே உள்ள தொடா்பை உறுதிப்படுத்தும் பல்வேறு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கில் விசாரணை தொடா்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் அத்துமீறல்-ராணுவம் விசாரணை: இதனிடையே, கிஷ்த்வாா் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமையன்று பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையின் போது பொதுமக்கள் 5 பேரை பாதுகாப்புப் படை வீரா்கள் சிலா் தாக்கி மோசமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ராணுவம் விசாரணையை தொடங்கியுள்ளது.