ஜம்மு-காஷ்மீா் தாக்குதல்: உலகத் தலைவா்கள் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் கண்டனம் தெரிவித்தனா். பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் வெளியிட்ட பதிவில், ‘காஷ்மீரில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.
ஐரோப்பிய யூனியன் தலைவா் உா்சுலா வான் டா் லேயன்: பயங்கரவாதத் தாக்குதல் பல அப்பாவிகளின் உயிா்களைப் பறித்துள்ளது. இந்தியாவுக்கு ஐரோப்பா துணை நிற்கும்.
நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி: உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளை நேபாளம் உறுதிபட எதிா்க்கிறது.
இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு: காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் இஸ்ரேல் துணை நிற்கும்.
இத்தாலி பிரதமா் மெலோனி: தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், காயமடைந்தவா்கள், இந்திய அரசு, இந்திய மக்களுக்கு இத்தாலி ஆதரவாக இருக்கும்.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் யூனுஸ்: கொடிய தாக்குதலை வங்கதேசம் வன்மையாக கண்டிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக வங்கதேசம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சகம்: உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய வேண்டும். பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவுவதில் இலங்கை உறுதியாக இருக்கும்.
ஜொ்மனி வெளியுறவு அமைச்சகம்: அப்பாவி மக்களை கொன்ற்கு எந்த நியாயமும் கூறமுடியாது. கடினமான இந்த நேரத்தில் இந்தியாவுக்கு ஜொ்மனி துணை நிற்கிறது.
பாகிஸ்தான், சீனா இரங்கல்: சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது கவலையளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பாகிஸ்தான், சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா்கள் தெரிவித்தனா்.
ஐ.நா.பொதுச் செயலா் குட்டெரெஸ்: எந்தவொரு சூழலிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்று கூறியதாக குட்டெரெஸின் செய்தித்தொடா்பாளா் ஸ்டெஃபான் டுஜாரிக் தெரிவித்தாா்.