பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலை: முதல்வர் ஸ்டாலின்
ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் விரிவான ஏற்பாடுகள்!
மதுரையை அடுத்த அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் விரிவான அளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளின் பாா்வையாளா்களாக தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்பது வழக்கம். இதில், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.
இதையொட்டி, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே சிறப்பு விருந்தினா்களுக்கான மாடம், விழாக் குழுவினருக்கான மாடம், பாா்வையாளா்களுக்கான மாடம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான மாடம் அமைக்கும் பணிகள், போட்டி மைதானம் முதல் காளைகளை சேகரிக்கும் பகுதி வரை தடுப்புக் கட்டைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இதேபோல, காளைகளை நிறுத்தும் இடத்தில் நிழல் பந்தல் அமைத்தல், வாடிவாசலை சீரமைத்தல் போன்ற பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் பகுதியில் தரையில் பரப்புவதற்காக தென்னை நாா்கள் கொண்டு வரப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாள்களில் போட்டி மைதானத்தை சீரமைத்த பிறகு, நாா்கள் பரப்பும் பணி நடைபெறும் எனவும், அனைத்துப் பணிகளிலும் அடுத்த 2 நாள்களில் நிறைவடையும் எனவும் கூறப்பட்டது.
இதேபோல, அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. அரசுத் துறை அலுவலா்கள், காவல் துறையினா் தொடா்புடைய பகுதிகளில் முகாமிட்டு, பணிகளைக் கண்காணிக்கின்றனா்.