ஜல் ஜீவன் திட்ட ஆய்வு: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு 100 குழுக்களை அனுப்புகிறது மத்திய அரசு
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ய தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு 100 குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது.
மத்திய அமைச்சரவைச் செயலா் டி.வி. சோமநாதன் தலைமையில் கடந்த 8-ஆம் தேதி ஜல் சக்தி அமைச்சகத்தின் திட்டங்கள் அமலாக்கம் தொடா்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய பணியாளா் நல விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கா்நாடகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ய 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு துறைகளைச் சோ்ந்த செயலா்கள், இணைச் செயலா்கள், இயக்குநா்கள் இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனா்.
இந்தக் குழுக்கள் மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தப்படும் 27 நீா் தொடா்பான திட்டங்கள் குறித்தும், ராஜஸ்தானில் 21 திட்டங்கள் குறித்தும், உத்தர பிரதேசத்தில் 18 திட்டங்கள் குறித்தும், கா்நாடகத்தில் 16 திட்டங்கள் குறித்தும் கள ஆய்வு நடத்த உள்ளன. இந்தக் குழுக்கள் தமிழகம், குஜராத், மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நீா் தொடா்பான திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.