மாநிலக் கல்விக் கொள்கை மறைந்து கிடப்பது ஏன் ?
முதல் முறையாக இந்தியாவில் ஒரு கூட்டாட்சி அமைப்பை உருவாக்கியது 1935ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் கால -அரசுச் சட்டம் (Government of India Act 1935). இந்தச் சட்டத்தின்படி, முக்கியமான ‘பொது நலனான’ “கல்வி” என்னும் பொருட்பாடு (Subject), அதிகாரப் பகிர்வின்வழி, 'மாநிலப் பட்டி’யில் (Provincial List) இருந்தது. நாடு விடுதலையடைந்த பிறகும் 1976 வரை -1935 ஆம் ஆண்டு சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிலைப்பாடே - “கல்வி” 'மாநிலப் பட்டி’யில்தொடர்ந்தது.
இந்திரா காந்தி ஆட்சி (நெருக்கடி நிலைக்) காலத்தின்போதுஅரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க ஸ்வரண் சிங் குழு அமைக்கப்பட்டது. எந்த நியாயமான அடிப்படையும் இல்லாமல், 'கல்வியை'ப் பொதுப்பட்டிக்கு (Concurrent List) மாற்றும் அநாவசியப் பரிந்துரை இந்தக் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாக வைக்கப்பட்டது.
அதிகாரக் குவியலின் உச்சத்தில் அமர்ந்திருக்க விரும்பிய இந்திரா காந்தியின் அரசு, 42-வது அரசியலமைப்பு திருத்தம் (1976)மூலம் 'கல்வி'யை மாநிலப் பட்டியிலிருந்து பொதுப்பட்டிக்குப் பெயரச் செய்தது. இந்த மாற்றத்திற்கான விரிவான காரணம் எதுவும் அப்போதும் தற்போது வரையும் வழங்கப்படவில்லை.
இந்திரா காந்தி அரசு வீழ்ச்சிக்குப் பின், மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசாங்கம், முன்னர் இருந்த அரசு 42-வது திருத்தத்தின் மூலம் செய்திருந்த பல சர்ச்சைக்குரிய மாற்றங்களை மாற்றியமைக்க 44-வது அரசியலமைப்பு திருத்தத்தை (1978) நிறைவேற்றியது. இந்தத் திருத்தங்களில் ஒன்று 'கல்வியை' மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதாகும்.
ஆனால், கல்விக்கு நிகழ்ந்த சோகம் யாதெனில், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமலே போயிற்று. அதனால், 1976முதல் ‘கல்வி’யைத் தேவையில்லாமல் பொதுப்பட்டிக்கு மாற்றியதைத் திரும்ப மாநிலப் பட்டிக்கே மாற்றச் செய்யப்பட்ட சட்டபூர்வ முயற்சி தோல்வியாகி, கல்வி பொதுப்பட்டியிலேயே தங்கிவிட்டது.
பொதுப்பட்டியில் (List III Concurrent List) தங்கிய கல்வி, தற்போதும் அங்கேயே இருப்பதால்தான் - அதிகார மையப்படுத்தலின் ஒருகூறாக – 1986 முதல் 34 ஆண்டுகளாக நிலவி வந்த தேசிய கல்விக் கொள்கைக்கு (தே.க.கொ.) மாற்றாக - ஒன்றிய அரசு வடிவமைப்பில் தே.க.கொ. (NEP 2020), ஒருதலையாக வந்துள்ளது. அனைத்து மாநிலங்களும் அதனை (தே.க.கொ.) ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்ற நியாயமற்ற வலியுறுத்தலையும் ஒன்றிய அரசு செய்கிறது.
ஒரு தேசியக் கொள்கை, குறிப்பாகக் கல்வியில், எவ்வளவு விரிவானதாக இருந்தாலும், அது அனைத்து மாநிலப் பகுதிகளின் தனிப்பட்ட தேவைகளையும் திறம்பட நிவர்த்தி செய்ய இயலாது என்பதை உணர மறுத்து அடம்பிடிக்கிறது, ஒன்றிய அரசு. மாநிலங்கள் தத்தமது சூழல்கள், தேவைகளுக்கேற்பத் தமக்கான தனித்த கல்விக் கொள்ளைகளை வகுத்துக்கொண்டு செயல்படுத்த முற்பட்டால் அம்மாநிலத்திற்கு உரிமையான நிதியைத் தர மறுத்து அடாவடியும் செய்கிறது ஒன்றிய அரசு.
உலக நாடுகளில் பெரும்பான்மையாகவும், வளர்ந்து நிற்கும் நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளிலும் ‘கல்வி’ முழுவதுமாக அதனதன் மாகாணங்களிடம்தான் உள்ளது.
சீரான, தரமான கல்வி மாநிலப் பகுதிகளின் தேவைகளுக்கேற்ப வழங்கப்பட ஏதுவாகக் ‘கல்வி’ பொதுப் பட்டியில் இருப்பதைவிட, மாநிலப் பட்டியில் - 1935 முதல் இருந்தவாறே - தொடர வேண்டும் என்பதே சார்பற்ற கல்வியாளர்களும் மாநிலங்களும் வேண்டுவதாகும். கல்விக் கொள்கைகளை உருவாக்கும்போது மாநிலங்களின் உள்ளூர்மயமாக்கப்பட்ட அணுகுமுறையை நாடுவதே அர்த்தமுள்ளதாக, பயன்விளைவிப்பதாக இருக்கும் என்பதால்தான் இவ்விழைவு.
கர்நாடகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், மேகாலயா போன்ற மாநிலங்கள் தங்களது குறிப்பிட்ட கல்வி இலக்குகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் சொந்தக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை உருவாக்கியுள்ளன. கல்விக் கொள்கை உருவாக்கம் என்பது நாடு முழுவதுமுள்ள அனைவருக்கும் அப்படியே பொருந்தக்கூடிய ஓர் அணுகுமுறையாக இருக்க முடியாது என்பதை, குறிப்பிட்ட இம்மாநில முயற்சிகள் தெளிவுபடுத்துகின்றன. மாநிலங்களின் தனிக் கொள்கையாக்கத்தின் மூலம், கல்வி அனைவருக்கும் பொருத்தமானதாகவும் அணுகக் கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்து, கல்வியில் மாநிலத்தின் விழுமியங்கள், முன்னுரிமைகளைப் பிரதிபலிப்பதாக இம்முயற்சிகள் அமைகின்றன.
மாநிலக் கல்விக் கொள்கைகள் நிலையானவை அல்ல என்ற புரிதல் அவசியம். மாறிவரும் சூழ்நிலைகள், வளர்ந்து வரும் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அவை காலப்போக்கில் மாற்றப்பட்டு உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய ஏற்பாடு கற்போரின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொண்டு, புதிய கல்விப் போக்குகள், தொழில்நுட்பங்கள், வழிமுறைகளுக்கு ஏற்ப மாநில அரசுகள் தமது கல்விக் கொள்கைகளை மாற்றியமைக்க ஒரு வழியை வழங்குவதாகவும் இருக்க வேண்டும்.
மாநில அளவிலான கொள்கை வகுப்பின்போது ஏற்கெனவே நடைமுறையிலுள்ள கொள்கைகளை மதிப்பாய்வு செய்தல்; நிலவும் சிக்கல்களை அடையாளம் காணுதல்; வழங்கப்படும் கல்விப் பரப்பை மேம்படுத்தத் தேவையான மாற்றங்களைப் பரிந்துரைத்தல் முதலியன நுட்பமாகக் கருதப்பட வேண்டும். மாநில அரசுகள் தமது கல்விக் கொள்கைகளை வகுக்க முற்படும்போது, பெரும்பாலும் மாநிலத்தின் கல்வி முறையில் நடைமுறை அனுபவமுள்ள நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வி அமைப்பின் பலவகைப் பங்குதாரர்களை (Stake holders) ஈடுபடுத்த வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் (2021) வெற்றிபெற்று அரசமைத்த பின்னர் முதல் பட்ஜெட்டின்போது, தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாகத் தமிழ்நாட்டிற்கெனத் தனித்ததொரு கல்விக் கொள்கையைக் கொண்டு வருவோம் என்றுமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதற்கிணங்க தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி, இளைஞர்களின் எதிர்காலம், தமிழ்நாட்டின் மொழிக்கொள்கை, பாரம்பரியம் முதலியவற்றைக் கருத்தில்கொண்டு ஒரு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, ஓய்வுபெற்ற தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி டி. முருகேசன் தலைமையில் (அது என்ன கல்விக்கொள்கை வகுக்கும் குழுவிற்கு நீதியரசர் தலைமை? தனியே விவாதிக்க வேண்டும்) 13 பேர் கொண்ட ஒரு மிகக் கலவையான குழுவை ஜூன் 2022 இல் தமிழ்நாடு அரசு அமைத்தது.
குழுவில் ஓய்வுபெற்ற பேராசிரியர், சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் எல். ஜவஹர் நேசன் (ஒருங்கிணைப்பாளர்), கணித அறிவியல் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆர். ராமானுஜம், மாநில திட்டக் குழு உறுப்பினர் ஓய்வுபெற்ற பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், யுனிசெப்பின் முன்னாள் கல்வி அலுவலர் டாக்டர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா, நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர். பாலு, அகரம் அறக்கட்டளையின் ஜெயஸ்ரீ தாமோதரன், எஸ். மாடசாமி, துளசிதாசன் ஆகியோர் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இக்குழுவில் இடம் பெற்ற பலர், அவரவர் துறைகளில் சிறப்புகள் அடைந்தவர்களாக இருந்தாலும், எதிர்காலச் சமுதாயத்தை ஆளப் போகும் இளந்தலைமுறையினரை ஆயத்தப்படுத்தவல்ல அதிமுக்கியமான, கல்விக்கொள்கைக்கு சிறப்பான பங்களிக்கப் பொருத்தமானவர்கள்தானா என்ற கேள்வி எழும்வகையிலான குழுவாகவே அதன் அமைப்பு இருந்தது.
அமைக்கப்பட்ட அக்குழுவின் சார்பில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுடன் கலந்தாலோசிக்க மண்டல அளவிலான சில கூட்டங்கள் நடத்தப்பட்டன. மாநிலத்தில் தற்போதுள்ள கல்வி நிலையைப் பற்றிய அடிப்படை யதார்த்தங்கள் குறித்து ஆழமான புரிதல்பெற, மாநில வாரியம், மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. போன்ற பள்ளி வகைகளில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் நிலவும் பாடத் திட்டங்கள், கற்பித்தல் முறைகள், உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, ஆசிரியர், மாணவர் நலன்கள், பழங்குடியினர், தலித்துகள், மாற்றுத்திறனாளிப் பிரிவினர் போன்ற ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் மாணவர்களது கல்வித் தேவைகள் குறித்து விரிவான மதிப்பாய்வை குழு நடத்தியதா?தரவுகளைச் சேகரித்ததா? கணக்கெடுப்புகளை நடத்தியதா? என்பது குறித்த விவரங்கள் ஏதும் அறியக் கிடைக்கவில்லை.
இந்தக் குழு தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஆரம்பத்தில் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது (இதுவரை எந்தக் குழு ஓரிரு நீட்டிப்புகளையாவது பெறாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கை அளித்துள்ளது? இந்தக் குழுவும் அந்த மாதிரிப் போக்குக்கு விதிவிலக்கல்ல). ஜூன் 2023இல் அறிக்கை அளித்திருக்க வேண்டிய மாநிலக் கல்விக் கொள்கை வகுப்புக் குழுவிற்கு (மா.க.கொ.வ.கு.) முதல் கால நீட்டிப்பாக செப்டம்பர் 2023 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் 20 மே 2023,அறிவிப்பு தகவலளித்தது.
காலக்கெடு நீட்டிப்புடன் கூடவே, விநோதமான வகையில் (மே மாதத்திலிருந்து செப்டம்பர் 2023 வரை கால நீட்டிப்பு என்றால், கூடுதலாக உள்ள குறுகிய நான்கு மாத காலத்திற்கு) குழுவில் மேலும் இரண்டு புதிய உறுப்பினர்கள் - காயிதே -இ- மில்லத் அரசு மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வர், டி. ஃப்ரீதா ஞானராணி, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவர் முனைவர் ஜி. பழனி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். (என்ன தேவை? என்ன பயன் எதிர்பார்ப்பு?).
மா.க.கொ.வ. குழுவிற்கான கால நீட்டிப்பு அறிவிப்பிற்கும், இரண்டு புதிய உறுப்பினர்கள் அகால நியமனத்திற்கும் முந்தைய வாரத்தில் (மே 10, 2023) மா.க.கொ.வ. குழு ஒருங்கிணைப்பாளர், சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ஜவஹர் நேசன், ”கல்விக்கொள்கை வகுக்கும் குழுவின் செயல்பாடுகளில் அரசு உயர்நிலை (இ.ஆ.ப.) அலுவலர்களின் ஏற்க இயலாத தலையீடு வளர்ந்துகொண்டிருப்பதாகவும், தனிப்பட்ட முறையில், தான் முதல்வரின் (அப்போதைய) முதன்மைச் செயலரால் ‘வாய்மொழி இகழ்ச்சியும் அவமரியாதையும்’ செய்யப்பட்டதாகவும்” நீண்டதோர் அறிக்கை மூலம் கல்விக் களத்தை அதிரச் செய்தார்.
மேலும், “எந்தத் தேசியக் கல்விக் கொள்கைக்கு (தே.க.கொ.) மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கை (மா.க.கொ.) வரைவு உருவாக்கம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதோ அதற்கு நேர்மாறான போக்கில் - தே.க.கொ. அடிப்டையிலேயே மா.க.கொ. வடிவமைக்கப்பட - முதல்வரின் (அப்போதைய) முதன்மைச் செயலரால் தனக்கு வற்புறுத்தல் நிகழ்த்தப்படுவதாகவும் வலுவான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு மேலும் வலுவற்ற மா.க.கொ. வரைவுக்குழுத் தலைமையின் கீழ் - வற்புறுத்தல் ஏற்படுத்தும் இ.ஆ.ப. அலுவலர்களின் தலையீடுகளுக்கிடையில் - தான் பணியாற்ற இயலாது எனக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து முனைவர் ஜவஹர் நேசன் விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
அரசியல் கட்சிகளின் வழக்கமான அத்தனை நடவடிக்கைகளுக்கும் ஒத்துப்போவது போன்ற செயல்பாடாக, மா.க.கொ.வ. குழுவின் தலைவர், முன்னாள் நீதியரசர் முருகேசன் மற்றும் குழுவின் 13 உறுப்பினர்களில் பெரும்பான்மையினரது கையெழுத்தோடு, ஜவகர் நேசன் அடுக்கிய அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் – மரபுப்படி – கோரஸாக மறுத்தனர். இத்தகைய லாவணிகள் மாநிலத்தில் கல்வி மேம்பாட்டுக்கான உண்மையான கரிசனங்கொண்டோர் மனதில் கவலையை, கசப்பையே வளரச் செய்தது.
முதல் நீட்டிப்புக் காலமான செப்டம்பர் 2023-க்குள் குழு தனது அறிக்கையை அளிக்கவில்லை. அதற்குப் பிறகு அறிக்கை அளிக்க ஆயத்தமாகி வருவதாகச் சொல்லப்பட்ட காலத்தில், மக்களவைத் தேர்தல் (2024) இடைவந்ததால், மாதிரி நடத்தை விதிகள் (MCC), அமலுக்கு வந்துவிட்டன. ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு விதிகள் நீக்கப்படும் என்றும், அது நீக்கப்பட்ட பிறகு, மாநில கல்விக் கொள்கையின் வரைவை தமிழ்நாடு அரசு வெளியிடும் என்று மே 11, 2024 இல் அறிவிக்கப்பட்டது. கல்விக் கொள்கையின் வரைவு வெளியிடப்பட்ட பிறகு, இறுதி ஆவணம் வெளியிட மூன்று மாதங்களுக்கும் மேலாகும் என்று அப்போது பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.
இவற்றைக் கடந்து, ஜூலை 1, 2024 இல் நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழுவினர் மாநிலக் கல்விக்கொள்கை வரைவு அறிக்கையைத் தமிழக முதல்வரிடம் ஒருவழியாகச் சமர்ப்பித்துவிட்டனர். அதன்பின் கடந்த பத்து மாதங்களாக அந்த அறிக்கை பூட்டிவைக்கப்பட்டிருக்கிறது போலும். அதற்குள் சில பத்திரிகைகளும் ஊடகங்களும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதாகப் பல கற்பனைக் ‘கதை’களைப் பதிப்பித்துவிட்டன.
தேசிய கல்விக் கொள்கை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, அதன் மீதான விவாதங்கள், சர்ச்சைகள் பெருகத் தொடங்கிவிட்டதால் மாநிலக் கல்விக் கொள்கை முன்னரே, விரைவில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்பதே கல்வியில் கரிசனங்களோடு களம் நிற்கும் பலரது ஆதங்கமாக இருந்தது. புதிய மாநிலக் கல்விக் கொள்கை அறிவிப்பை கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களும், பணியாற்றும் ஆசிரியர்களும், பயில்வோரும், அவர்களது பெற்றோர்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘தேசியக் கல்விக்கொள்கை 2020 மதயானை’ நூல் வெளியீட்டிற்கு முன்பு, மாநிலக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் பொருத்தம் கூடியிருக்கும். “மத யானையை” எதிர்கொள்ளும் ‘கும்கி’யாக மாநிலக் கல்விக் கொள்கையை முன்நிறுத்தியிருக்க வேண்டும் இக்காலத்திற்குள்.
அரசிடம் அளிக்கப்பட்டுள்ள மா.க.கொ. அறிக்கைப் பரிந்துரைகளைச் செயல்படுத்த - சட்டபேரவைத் தேர்தல்கள் (2026) வர இருப்பதால் – குறைவான கால அவகாசமே அரசுக்கு இருப்பதையும், அடுத்த கல்வியாண்டு (2025 - 2026) தொடங்க ஓரிரு வாரங்களே இடையிருப்பதையும் யாரும் உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லையே.
வரைவுக் கொள்கை வெளியிடப்பட்டு, அது பொதுவில் வைக்கப்பட்டுக் கால அவகாசமளித்துப் பரவலான தரப்புகளிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட வேண்டும். அக்கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி செய்யப்படக் கால அவகாசம் வேண்டும், இத்தகைய அவசிய காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டால், தமிழ்நாடு அரசு, ஒரு ஆவலுடன், வேகத்துடன் பதவிக்கு வந்த ஆண்டிலேயே (2021) மா.க.கொ. வகுக்கப்படும் என அறிவித்து, குழு அமைத்து, (2022) குழுவிற்கு ஓராண்டுக்குப் பின் கால நீட்டிப்புமளித்துக் குழுவின் அறிக்கையும் பெற்ற பின்னர் (2024) இவ்விஷயம் மீது இதுவரை உரிய கவனம் செலுத்தப்படாததால், மாநிலக் கல்விக்கொள்கை மலராமலே இப்போதைய அரசின் பதவிக் காலம் நிறைவடைந்து விடுமோ எனும் நியாயமான ஐயங்கள் நிறைந்து நிற்கின்றனவே.
தே.க.கொ. 2020-க்கு மாற்றாக எதுவும் உருப்படியாகச் செய்யப்படாமலே உருண்டோடிவிட்டன, நான்காண்டுகளுக்கும் சற்றுமேலாக. மாநிலக் கல்விக்கொள்கையைத் தக்கவாறு அறிமுகம் செய்து செயல்படுத்தும் வாய்ப்பை இப்போதைய ஆட்சிக்காலத்திற்குள் தற்போதைய அரசு செயலாக்குவது அரிதனவே தோன்றச் செய்துள்ளன அரசின் செயல்பாடுகள்.
”செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்“- குறள் 466.
செய்யக் கூடாததை செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும். - (கலைஞர் மு. கருணாநிதி உரை)
**
சற்று நீண்ட ஒரு பின்குறிப்பு
மாநிலக் கல்விக் கொள்கை வகுக்க அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் சார்பாக, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எல். ஜவஹர் நேசனால் 13 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தத் துணைக் குழுக்களின் அமைப்பும் அவற்றின் பரிந்துரை வரம்புகளும் (Terms of reference) சரிவரத் தெளிவாக அமையவில்லை என (Private Education) ‘தனியார் கல்வி’ என்ற குழுவில் இடம் பெற்றிருந்த இக்கட்டுரையாளரால், துணைக்குழு அமைப்பாளருக்குத் தொடக்கத்திலேயே எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது
அதாவது, 13 துணைக் குழுக்களில், பள்ளிக்கல்வி, உயர்நிலைக்கல்வி, தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, ஆராய்ச்சி, நிதி போன்ற தனித்தனித் துணைக்குழுக்களும், தனியார் கல்விக்கான துணைக் குழுவும் உள்ளன.
‘தனியார் கல்வி’ என்பது பிற (பள்ளிக்கல்வி, உயர்நிலைக்கல்வி, தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, ஆராய்ச்சி, நிதி போன்ற) துணைக் குழுக்களோடும் தொடர்பு கொண்டதாக இருப்பது நிதர்சனம்.
குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எல். ஜவஹர் நேசனால் தயாரிக்கப்பட்டு, 133 பக்க (Problem Statement என்ற) அறிக்கைத் தயாரிப்புக்கான கருதுகோள் ஒன்றும் துணைக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. அதிலுள்ளபடியும் பார்த்தால், தனியார் கல்விக் குழுவிற்கான தெளிவான வரையறையில்லை. தனியார் கல்வி என்பது கல்வியின் அனைத்து நிலைகளிலும் உள்ளது என்பது உண்மையன்றோ?
‘தனியார் கல்வி’ என்ற துணைக்குழுவின் கருதுகோள்கள், பரிந்துரை வரம்புகளுள் - தொடக்கநிலைக் கல்வி முதல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அளவு வரையும் தனியார் கல்வி இருப்பதால்- ஏற்கெனவே தனித்தனித் துணைக்குழுக்களாக உள்ள பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி துணைக்குழுக்களின் கருதுகோள்களும் பரிந்துரைகளும், இத்துணைக்குழுவின் கருதுகோள்கள் பரிந்துரைகளுடன் ஒன்றுடன் ஒன்று (overlap) என ஆகும் நிலையாகிறது.
எனவே ‘தனியார் கல்வி’த் துணைக் குழுவின் பரிந்துரை வரம்பை முதலில் நிர்ணயித்துக்கொள்ள வேண்டியது அவசியம் என இரண்டு முறை கட்டுரையாளரால் குழுவிடம் ‘குறிப்பு’ (Note) அளிக்கப்பட்டது. ஆனால், ஏதும் செய்யப்படவில்லை. இதற்குத் தீர்வு காணப்படாமலேதான் மாநிலக் கல்விக்கொள்கை வரைவு அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற துணைக்குழுக்களின் அனுபவங்களும்கூட இதுபோல இருக்கலாம்!).
* * *
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்]
இதையும் படிக்க: மற்றுமொரு மாநில சுயாட்சித் தீர்மானம் - மாற்றம் விளையுமா?