விழுப்புரம் அருகே மலட்டாற்றில் குளித்த மூவர் பலி
விழுப்புரம் மாவட்டம், அரசூர் மலட்டாற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி சகோதரிகள் இருவர் உள்பட மூவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூரைச் சேர்ந்த பழனி மகள்கள் சிவசங்கரி (20), அபிநயா (15). கடலூர் மாவட்டம், தட்டாம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (15).
இவர்களில் சிவசங்கரி திருவெண்ணெய்நல்லூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் படித்தவர். அபிநயா, அண்மையில் வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்.
ராஜேஷ் கடலூர் மாவட்டம், மேல் குமாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து 10-ஆம் வகுப்புக்கு செல்ல இருந்தவர். கோடை விடுமுறையைக் கொண்டாட அரசூரிலுள்ள தனது பெரியப்பா பழனி வீட்டுக்கு தம்பி கிரண்குமாருடன்(8) ராஜேஷ் வந்திருந்தார்.
இந்தநிலையில், புதன்கிழமை காலை சிவசங்கரி தங்களுக்கு சொந்தமான வயலுக்குச் சென்று வேலி முள்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து தங்கை அபிநயா, சித்தி மகன்கள் ராஜேஷ், கிரண்குமார் ஆகியோருடன் அருகிலுள்ள மலட்டாற்றில் குளிப்பதற்காகச் சென்றார்.
தொடர்ந்து நான்கு பேரும் ஆற்றுக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளது. மேலும் ஆழமாக உள்ளது எனக் கூறி, தனது தம்பி கிரண்குமாரை மேலே செல்லுமாறு கூறி ராஜேஷ் தள்ளிவிட்டார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மூவரும் நீரில் மூழ்கி மண்ணில் புதைந்தனர். நீண்ட நேரமாகியும் வெளியே வர முடியாமல் மூவரும் தவித்தனர். இதைக் கண்டு சிறுவன் கிரண்குமார் சப்தமிட்டார். பின்னர் 2 கி.மீ. தொலைவு நடந்து சென்று, வீட்டுக்குச் சென்று பெரியம்மா சித்ராவிடம் நிகழ்ந்த தகவலைக் கூறிவிட்டு அழுதே கொண்டே இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து மலட்டாறு பகுதிக்கு விரைந்தனர். தொடர்ந்து நீரில் மூழ்கிய மூவரை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இதில் அபிநயா, ராஜேஷை அவர்கள் மீட்டனர். சிவசங்கரியை அவர்களால் மீட்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் நிகழ்விடம் சென்று மண்ணில் புதைந்த சிவசங்கரியை மீட்டனர்.
தொடர்ந்து மூவரும் அவசர சிகிச்சை ஊர்தி மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது ஏற்கெனவே சிவசங்கரி, அபிநயா, ராஜேஷ் ஆகிய மூவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் உள்ளிட்ட இருவர், அவர்களது சித்தி மகன் என மூவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.