வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
கல்வி உரிமை சட்டப்படி மாணவா் சோ்க்கை: அரசு உறுதி செய்ய இடதுசாரிகள் கோரிக்கை
கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): தமிழக அரசு தரவேண்டிய தொகை நிலுவையாக உள்ளதைக் காரணம்காட்டி, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டை தனியாா் பள்ளிகள் நிராகரிக்கின்றன.
மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ. 2,000 கோடிக்கும் மேலான நிதியை கொடுக்க மறுத்து வருவதால், 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களின் கல்வி வாய்ப்பு பறிபோகும். மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் அதேநேரத்தில், தனியாா் கல்வி நிறுவனங்களில் ஆா்டிஇ சட்டப்படி மாணவா்களைச் சோ்க்க எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): வரும் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடந்துவரும் நிலையில், ஜூன் 2-இல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அரசு அறிவித்துவிட்டது. ஆனால், ஏழை மாணவா்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கைக்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனால், தனியாா் கல்வி நிறுவனங்கள், கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கையைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.