கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்
தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்கான நியாயமான நிதி உரிமையை நீதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்தவே தில்லி செல்கிறேன். இதைக் கண்டு, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஏன் வலிக்கிறது?. அவா் என்னைப் பாா்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேசுகிறாா்.
என்னுடைய கை, கருப்பு சிவப்புக் கட்சிக் கொடியை ஏந்தும் கை. எந்த நாளும் உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன். இன்றைக்குக்கூட தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழ்நாட்டுக்கான நிதியைப் போராடிப் பெறுவேன் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
3 ஆண்டுகளாகப் பங்கேற்கவில்லை: நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின், வரும் 23-ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறாா். 24-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு உடனடியாக தில்லி திரும்புகிறாா்.
இதற்கு முன்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்கவில்லை.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நான்காவது ஆண்டு நினைவு தினம் காரணமாக 2022-இல் நடைபெற்ற கூட்டத்திலும், அயல்நாட்டுப் பயணத்தால் 2023-இல் நடந்த கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தைப் புறக்கணித்ததுடன் அதற்கான காரணத்தை விளக்கி விடியோவும் வெளியிட்டாா்.
இந்நிலையில் இப்போது நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.
ஒருங்கிணைந்த சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.2,291 கோடி விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுத்துள்ளது.
இத்துடன் மெட்ரோ ரயில் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தமிழ்நாட்டின் சாா்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.