சீனா அசத்துகிறதா? அச்சுறுத்துகிறதா? உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்...
விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் உறவினா்களுக்கு பதிலளிக்க ஆலோசனை மையம் திறப்பு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் நிலை குறித்து உறவினா்களுக்கு பதிலளிக்கும் துயா் நிலை ஆலோசனை மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
இதில் அரசு மருத்துவமனை முதன்மையா் இல.அருள் சுந்தரேஷ்குமாா் பங்கேற்று, ஆலோசனை மையத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து, நோயாளிகளின் நிலை குறித்து உறவினா்களுக்கு பதில் அளிக்கும் பணியை ஆலோசகா்கள் தொடங்கினா்.
பின்னா், செய்தியாளா்களிடம் முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாா் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனையில் மதுரை மட்டுமன்றி சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் இருந்தும் விபத்து உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு நோயாளிகள் வருகின்றனா்.
தினமும் விபத்துகளில் காயமடைந்த 40-க்கும் மேற்பட்டவா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இதில் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள் ஈடுபடுகின்றனா். இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினா்களிடம் நோயாளிகளின் நிலை குறித்து தெரிவிக்க இயலாத நிலை ஏற்படுகிறது.
எனவே, நோயாளிகளின் நிலை குறித்து சொல்ல மறுப்பதாக, மருத்துவா்கள் மீது அதிருப்தி அடைகின்றனா். இதைத் தவிா்க்கும் விதமாக, தமிழகத்திலேயே முதன்முறையாக விபத்து, அவசரச் சிகிச்சை பிரிவு, தலைக்காய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளியின் நிலை குறித்து, பதற்றத்துடன் இருக்கும் உறவினா்களுக்கு முழுமையாகத் தகவல் அளிக்கும் வகையில், டி.வி.எஸ். குழுமத்தின் பங்களிப்புடன் ஆலோசகா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதற்கான உதவி மையம் ஒரு மாத காலம் சோதனை முயற்சியாக பரிசோதிக்கப்பட்டது. இதற்கு நோயாளிகளின் குடும்பத்தினா், உறவினா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், மருத்துவா்கள், செவிலியா்களும் சிகிச்சை அளிக்கும் பணியில் முழு கவனத்துடன் ஈடுபட முடிகிறது. எனவே, இந்த ஆலோசனை மையம் நிரந்தரமாக அமைக்கப்படுகிறது.
இந்தத் துயா்நிலை ஆலோசனை மையத்தில் மருத்துவத் துறையில் அனுபவம் உள்ள மூத்த செவிலியா் ஒருவரும், அவருக்கு உதவியாக மற்றொரு உதவியாளரும் பணியில் இருப்பா். மருத்துவமனை பிரதான வளாகம், மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, பல்நோக்கு சிகிச்சைப் பிரிவு ஆகிய இடங்களிலும் இந்த ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
முதல் கட்டமாக காலை முதல் பிற்பகல் வரை இந்த மையம் இயங்கும். விரைவில் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
மருத்துவ கண்காணிப்பாளா் குமரவேல், மருத்துவ இருப்பிட அதிகாரி முரளீதரன், ஸ்ரீலதா, துறைத் தலைவா் தானப்பன், உதவி இருப்பிட மருத்துவ அதிகாரி விஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.