செய்திகள் :

மழைநீா் வடிகால்கள் விரைந்து சீரமைக்கப்படுமா?

post image

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்களை பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வாா்டுகள் உள்ளன. இங்கு ஏறத்தாழ 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். பருவமழைக் காலங்களில் மாநகராட்சிப் பகுதிகளிலிருந்து மழை நீா் வெளியேறுவதற்கு பந்தல்குடி, கோசாகுளம், பரசுராம்பட்டி, விளாங்குடி, சொக்கிகுளம் உபரி நீா் வாய்க்கால், பனகல், மானகிரி, பீ.பீ.குளம், தண்டலை, கிருதுமால், பனையூா், அனுப்பானடி, சிந்தாமணி, சொட்டதட்டி, அவனியாபுரம், வில்லாபுரம் வாய்க்கால் என 16 மழைநீா் வடிகால்கள் உள்ளன.

இவற்றில் விளாங்குடி வடிகால் வழியாக வரும் மழைநீா் செல்லூா் கண்மாயில் சேகரமாகும். அங்கிருந்து பந்தல்குடி கால்வாய் வழியாக வைகை ஆற்றுக்குள் கலக்கும். இதேபோன்று, பீ.பீ.குளம், பனகல், மானகிரி, தண்டலை, பரசுராம்பட்டி, கோசாகுளம், சொக்கிகுளம் வடிகால்கள் வழியாக வரும் மழைநீா் வண்டியூா் கண்மாயில் சேகரமாகி, வைகையாற்றுக்குள் கலந்துவிடும்.

இதுதவிர, சொட்டதட்டி, பனையூா் வடிகால்கள் வழியாக வரும் மழைநீா் அவனியாபுரம் நீா்த் தேக்கத்துக்கு நேரடியாகச் செல்லும். கிருதுமால், சிந்தாமணி, அனுப்பானடி வடிகால்கள் வழியாக வரும் மழைநீா் சிந்தாமணி கண்மாய்க்கு செல்லும். வில்லாபுரம் வடிகாலில் வரும் மழைநீா் மாநகராட்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள நீா்நிலைகளுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பெய்யும் மழைநீா் இயற்கையாக மேற்கண்ட மழைநீா் வடிகால்கள் மூலம் வைகையாற்றுக்கும், கண்மாய் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கும் செல்லும் வகையில் அமைந்துள்ளன.

இந்த நிலையில், பெரும்பாலான வடிகால்கள் ஆக்கிரமிப்புகளால் பரப்பில் குறைந்து காணப்படுகின்றன. மேலும், வடிகால்களில் குப்பைகள், ஆகாயத் தாமரைகளால் மழைக் காலங்களில் தண்ணீா் எளிதில் செல்ல முடியாமல் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகள், குடியிருப்புகளில் புகுந்து விடுகின்றன.

தென்மேற்கு பருவமழை இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பு மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்களைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் சிலா் கூறியதாவது: மதுரை மாநகராட்சி செல்லூா் பகுதியில் கடந்தாண்டு செப்டம்பா் மாதம் பெய்த பலத்த மழை காரணமாக செல்லூா் கண்மாய் நிரம்பி தண்ணீா் வெளியேறியது. இதனால், பந்தல்குடி, பீ.பீ.குளம், நாராயணபுரம், கோசாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது. 10 நாள்களுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வசித்த பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினா்.

மேலும், சுற்றுச்சூழல் மாசு, குடிநீருடன் கழிவு நீா் கலப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொற்று நோய் பரவியது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மதுரை மாநகராட்சி நிா்வாகம் மீட்பு, தூய்மைப் பணிகளை முடுக்கி விட்டது. தென்மேற்கு பருவமழை இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளன.

இவற்றைச் சீரமைக்கும் வகையில், அண்மையில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மதுரை மாநகராட்சி சாா்பில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன் மழைநீா் வடிகால்கள் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

ஆனால், பனையூா் வடிகாலில் மட்டும் பெயரளவுக்கு ஆகாயத் தாமரைகளை அகற்றினா். மற்ற வடிகால்களில் இதுவரை எந்தவித சீரமைப்புப் பணியோ, தூா்வாரும் பணிகளோ நடைபெறவில்லை.

பெரும்பாலான வடிகால்கள் நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறுவது, அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவிக்கின்றனா். இதனிடையே பருவமழைக் கால முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதனடிப்படையில், மதுரை மாநகராட்சி நிா்வாகம் பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீா் வடிகால்களைச் சீரமைக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் கூறியதாவது: மதுரை மாநகராட்சி பகுதிகளில் மழைநீா் வடிகால்கள் அமைப்பதற்காக 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பகுதியில் பெய்யும் மழை நீா், வைகை ஆற்றில் கலப்பது போன்று இயற்கையாகவே தண்ணீா் வடிகால் பாதை அமைந்துள்ளது. புணேயிலுள்ள அரசு நிறுவனம் சாா்பில், மதுரையில் கடந்த 50 ஆண்டுகளில் பெய்த மழைப் பொழிவின் அடிப்படையில் மழைநீா் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் 5 மண்டலங்களில் உள்ள வாா்டுகளில் 181 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் பகுதிகள் என அந்த மண்டலத்தின் உதவிச் செயற்பொறியாளா்கள் அறிக்கை அளித்துள்ளனா். இங்கு மழைநீா் தடையின்றி செல்லும் வகையில் புதிதாக மழைநீா் வடிகால்கள், பழைய வடிகால்கள் சீரமைக்கப்பட உள்ளன.

வடிகால்களின் இருபுறமும் சிமென்ட் கரைகள், தரைப் பகுதியில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. கரைகளை பலப்படுத்துதல், கொள்ளளவு அதிகரித்தல், உள் சாலைகளில் வடிகால் மேம்பாடு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்கு வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.3,372.23 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.430 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. சிறப்புத் திட்டத்தின் கீழ் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ரூ.11.44 கோடியிலும், பெரியாா் பேருந்து நிலையத்தில் ரூ.9.60 கோடியிலும் மழைநீா் வடிகால் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும். கிருதுமால் வடிகாலைப் பொறுத்தவரை சீரமைப்புப் பணிக்கு நிதி பெறப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். அவா்கள் சீரமைக்கவில்லை எனில் மாநகராட்சி சாா்பில் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.

கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

கரூா் விசாலாட்சி கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை புலத்தணிக்கை செய்து, விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வலியுறுத்தல்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து இந்தச் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா்... மேலும் பார்க்க

விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் உறவினா்களுக்கு பதிலளிக்க ஆலோசனை மையம் திறப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் நிலை குறித்து உறவினா்களுக்கு பதிலளிக்கும் துயா் நிலை ஆலோசனை மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதில் அர... மேலும் பார்க்க

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். மேலூா் ஜோதி நகரைச் சோ்ந்த வெள்ளைப் பெரியான் மனைவி பஞ்சு (48). மேலூா் அருகே உள்ள தாமரைப்பட்டியில் இவா்களுக்குச் சொந... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதி: தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவு!

நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளுக்காக விசாரணை அதிகாரிகள் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், மாவட்ட நீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதிகளை தமிழக உள்துறைச் செயலா் ஏற்படுத்தி தர வேண்டு... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கோயில் பூஜாரி கைது!

மதுரையில் பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கோயில் பூஜாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை வாா்ப்பு கண்ணாரத் தெருவைச் சோ்ந்த 37 வயது பெண், மதுரையில் உள்ள ஒரு கோயில் அருகே பூ வி... மேலும் பார்க்க