வேலூரில் பெண்ணை அடித்துக் கொன்று இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!
வேலூர்: வேலூரில் பெண்ணை அடித்துக் கொலை செய்து விட்டு இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் சின்னஅல்லாபுரம் கே.கே.நகர் திரவுபதியம்மன் கோயில் 3 ஆவது தெருவைச் சேர்ந்தவர் சபீனாபானு (33). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொணவட்டம் மதீனா நகரை சேர்ந்த ஜான்பாஷா என்பவருடன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனியாக சின்னஅல்லாபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
தொடர்ந்து சதுப்பேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலூர் விருபாட்சிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த சுரேஷ்(35) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இதில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களாக சுரேஷ் வேலைக்கு செல்லவில்லை. தொடர்ந்து 2 மாதங்களாக சபீனாபானு சுரேஷிடம் பேசுவதை நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் சபீனாபானு மீது கோபத்தில் இருந்த சுரேஷ், வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் சபீனாபானுவின் வீட்டிற்கு சென்ற சுரேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார். இதை பார்த்த சபீனாபானுவின் தந்தை சிராஜூதீன், தாய் ஆஜிரா ஆகியோர் தடுக்க முயன்றனர். இதில் இருவரையும் சுரேஷ் இரும்பு ராடால் தலையில் தாக்கியதால்
படுகாயமடைந்தவர்கள் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சபீனாபானு அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை துரத்திச் சென்ற சுரேஷ், சபீனாபானு வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் அருகே மடக்கி பிடித்து அவரது தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சபீனாபானு பலியானார்.
இதையடுத்து,சுரேஷ் தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தகவலறிந்து வந்த வடக்கு காவல் போலீஸார் சபீனாபானுவின் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சுரேஷின் கைப்பேசி எண்ணை வைத்து விருபாட்சிபுரம் நேதாஜி தெருவில் உள்ள அவரது வீட்டை கண்டுபிடித்த போலீஸார், பின்னர் அவரது வீட்டுக்கு சென்றபோது அங்கு தனது அறையில் சுரேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சபீனாபானுவை கொலை செய்த பின்னர், வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.