மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டியதால் 3 பேர் பலி!
ராமநாதபுரத்தில் மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டியதில் 3 பலியாகக் காரணமான ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் செல்லபாண்டியன் என்பவர் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில், மதுபோதையில் ஆட்டோவை ஓட்டிய நிலையில், பசும்பொன் புறநகர் பகுதியில் எதிரே வந்த போலீஸ் வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த 3 பேர் பலியாகினர்.
இதனையடுத்து, மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுர மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து, மதுரை அமர்வு நீதிமன்றத்தில் செல்லபாண்டியன் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம், மதுபோதையில் வாகனம் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறியது. மேலும், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் உறுதிப்படுத்தியது.
தொடர்ந்து, நீதிமன்றம் தெரிவித்ததாவது, ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஷேர் ஆட்டோக்களில் அதிகளவில் பயணிகள் ஏற்றப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆட்டோவின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக, மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியது.