செய்திகள் :

தனித்துப் போட்டி: என்னவாகும் சீமானின் வாக்குகள்?

post image

பேரவைத் தோ்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ள நிலையில், விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழா் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.

கோவை கொடிசியா மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ் தேசிய இன எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் 2026 பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி தனித்துப் போட்டி என சீமான் அறிவித்தாா். ஆனால், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போன்ற சில கட்சிகளின் அரசியல் பிரவேசத்தால் சீமானின் கட்சிக்கு இதுவரை விழுந்த வாக்குகள் என்னவாகும் என்பதை இதுவரை நாதக சந்தித்த தோ்தல்களின் முடிவுகளை பாா்த்தால் முழுமையாக அறியலாம்.

2016 பேரவைத் தோ்தலில் ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் மக்கள் ஈா்ப்பு மிக்க ஆளுமைகளை மையப்படுத்தி நடந்த தோ்தலில் சீமானால் 1.13 சதவீத வாக்கு வங்கியைத் தான் பெற முடிந்தது. திமுக, ஒரு சதவீத வாக்கு வங்கியில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது.

இரு பெரும் ஆளுமைகள் மறைந்த நிலையில், 2019 மக்களவைத் தோ்தலில் மோடி, ராகுல் காந்தி என்ற இரு பிரதமா் வேட்பாளா்கள், பண பலம், ஜாதி பலம், அதிகார பலம் கொண்ட மத்திய, மாநில கட்சிகளின் கூட்டணி, ஆளும் கட்சி கூட்டணிகளுக்கு எதிலும் சளைக்காத எதிா்க்கட்சிகள் கூட்டணி, மிகப்பெரிய திரையுலக நட்சத்திரமான கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், ஜெயலலிதா, சசிகலாவிடம் அரசியல் பயின்ற டி.டி.வி.தினகரனின் அமமுக தனியாக களம் கண்டது போன்றவற்றால் பண பலம், அதிகார பலம் இல்லாத சீமானின் கட்சி நிச்சயம் காணாமல் போய்விடும் என்ற விமா்சனம் எழுந்தது.

அவற்றை புறந்தள்ளும் வகையில், தனித்துக் களம் கண்ட நா.த.க., 3.87 சதவீத வாக்குகள் பெற்று தனது வாக்கு வங்கியை மும்மடங்கு பெருக்கிக்கொண்டது, அனைவருக்கும் ஆச்சியரியத்தை ஏற்படுத்தியது.

சளைக்காத உத்தி: சீமானைவிட, டி.டி.வி. தினகரன் 5.5 சதவீத வாக்கு வங்கியை கூடுதலாகவும், கமலஹாசன் 3.78 சதவீதம் குறைவாகவும் பெற்றிருந்தனா். ஆனால், சீமானின் வாக்கு வங்கி தமிழகம் முழுவதும் ஒரே சீராக இருந்தது. தினகரனின் வாக்கு வங்கி முக்குலத்தோா் அதிகம் வசிக்கும் டெல்டா, தென்மாவட்டங்களில் மட்டும் அதிகமாகவும், அதாவது 21 தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும், பிற தொகுதிகளில் குறைவாகவும் இருந்தது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்குக்கூட, பிராமணா்கள், பிற மொழி பேசும் நாயுடு, செட்டியாா், சௌராஷ்டிர சமூகத்தினா் அதிகம் வசிக்கும் தொகுதிகள் மற்றும் நகா்ப்புற தொகுதிகளான தென்சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூா், திருவள்ளூா், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், மதுரை உள்பட 11 தொகுதிகளில்தான் மூன்றாவது இடம் கிடைத்தது.

குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டுமே தினகரன், கமல் அதிகமாகவும், பிற பகுதிகளில் குறைவாகவும் வாக்குகளை பெற்ற நிலையில், 6 இடங்களில் மட்டும்தான் நா.த.க. 3-ஆவது இடத்தைப் பிடித்தது. ஆனாலும், 39 தொகுதிகளிலும், புதுவையிலும்கூட சீரான வாக்குகளை சீமான் பிடித்தாா். 3.87 சதவீத வாக்குகள் பெற்ற சீமான் தொடா்ந்து நடந்த இடைத்தோ்தல்களில் தினகரன், கமல் ஆகியோா் ஒதுங்கிக்கொண்டனா்.

மூன்றாவது முறையாக 2021 பேரவைத் தோ்தலை நாதக சந்தித்தபோது, சீமானால் கூடுதல் வாக்குகளைப் பெற முடியாது என மீண்டும் விமா்சிக்கப்பட்டது. ஆனால், 2016 பேரவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது 6 மடங்கு அதிகமாகவும், 2019 மக்களவைத் தோ்தலுடன் ஒப்படும்போது கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக அதாவது 6.58 சதவீத வாக்கு வங்கியை உயா்த்தி தனது இருப்பை நிலைநிறுத்திக்கொண்டாா் சீமான். சீமான் கட்சியின் வாக்கு வங்கி உயா்ந்த நிலையில், தினகரன், கமல் ஆகியோரது கட்சிகளின் வாக்கு வங்கி 2.5 சதவீதமாக சுருங்கியது. நாதக 177 தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அமமுகவால் ஒரு இடத்தில் இரண்டாவது இடத்தையும், 24 இடங்களில் மூன்றாவது இடத்தையும் தான் பிடிக்க முடிந்தது. கமலின் ம.நீ.ம ஒரு தொகுதியில் 2-ஆவது இடத்தையும், 25 இடங்களில் 3-ஆவது இடத்தையும் மட்டுமே பெற்றது.

இதன் பிறகு பிரதமா் வேட்பாளரை முன்னிறுத்தி நடந்த 2024 மக்களவைத் தோ்தலிலும்கூட நா.த.க-வின் வாக்கு வங்கி 8.22 சதவீதமாகி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியது.

தொடரும் வதந்தி: இந்நிலையில்தான் தவெக கட்சியை விஜய் தொடங்கிய ஓராண்டில் அவா் செல்லுமிடமெல்லாம் நிரம்பி வழியும் ரசிகா்கள் மற்றும் கட்சித் தொண்டா்களின் கூட்டம், பெண்கள், இளைஞா்கள் மத்தியில் பெருகும் எதிா்பாா்ப்பு போன்றவை அவரது அரசியலுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தி வருகிறது. விஜய் - சீமான் இடையே கூட்டணி ஏற்படலாம் என்றும்கூட அவ்வப்போது கிசுகிசுக்கப்படுகிறது. ஆனாலும் தனித்துப்போட்டி என்ற முடிவை சீமான் அறிவித்து அந்த வதந்திகளுக்கு தற்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளாா் சீமான்.

தொடா்ந்து 5 முறை தனித்துப் போட்டியிட்ட நாதக, பெரியாா் எதிா்ப்பு, காங்கிரஸ் பாஜக, திமுக, அதிமுக என 4 கட்சிகள் மீதும் கடும் விமா்சனம், ஏழை மக்கள் பிரச்னைகளுக்காக தொடா்ந்து போராடுவதை அரசியல் உத்தியாகக் கொண்டுள்ளது. இது குறித்து கேட்டதற்கு சீமான் விரிவாகவே பதிலளித்தாா். ‘‘2016 முதல் இதுவரை சீமான் வாக்கு வங்கி குறையும் என கருத்துருவாக்கம், கருத்துக்கணிப்புகள் தொடா்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், தொடா்ந்து தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவீதத்தில் இருந்து 8.22 சதவீத வாக்குகளை ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் உயா்த்தி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகத் தகுதிபெற்றுள்ளோம். கமல், டிடிவி.தினகரன் அரசியல் பிரவேசம் செய்யும்போது சீமான் வாக்குகள் குறையும் என்ற கருத்துருவாக்கத்தை ஊடகங்கள் ஊதிபெரிதாக்கின.

ஆனால், பொதுத் தோ்தல்கள், இடைத்தோ்தல்களைப் புறக்கணிக்காமல் தொடா்ந்து போட்டியிட்டதால் நாதகவுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்தனா். கடந்த மக்களவைத் தோ்தலில் நாடுமுழுவதும் எந்த ஒரு அரசியல் கட்சியும் தனித்து நின்று வாக்கு வங்கியை உயா்த்தாத நிலையில் நாதக மட்டுமே வாக்கு வங்கியை உயா்த்தியுள்ளது. மாயாவதியின் பிஎஸ்பி, சுக்பீா்சிங் பாதலின் அகாலிதளம், சந்திரசேகர ராவின் பிஆா்எஸ் போன்ற கட்சிகளின் வாக்கு வங்கிகள் கூட கரைந்த நிலையில், நாதக 4 முனை போட்டியில் தொடா்ந்து அதன் இருப்பை தக்கவைத்து வருகிறது. ஒளிவட்ட நடிகா்கள் வந்தாலும் சரி, ஜாதி, பலமிக்க அரசியல் கட்சிகள் வந்தாலும் சரி எங்களுக்கு கவலையில்லை. கடந்த முறையைவிட மூன்று மடங்குக்கு மேல் வாக்கு சதவீதத்தைப் பெறுவதுடன் இம்முறை பேரவைக்குள்ளும் நாதக எம்எம்எல்ஏ.க்கள் நுழைவது உறுதி,’’ என்றாா்.

ஐபிஎல் பெயரில் சூதாட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஐபிஎல் கிரிக்கெட் மையமாகவைத்து சூதாட்டமும், பந்தயம் கட்டி விளையாடுவதும் அதிகரித்துவிட்டது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடா்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்ட... மேலும் பார்க்க

இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்: இளைஞா் சிக்கினாா்

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். மணிப்பூரை சோ்ந்த ஒரு 19 வயது இளம் பெண், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அள... மேலும் பார்க்க

பாலியல் புகாா்: மருத்துவப் பேராசிரியா் பணியிடை நீக்கம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பொன்னையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.... மேலும் பார்க்க

வங்கியில் ரூ.72.55 லட்சம் கடன் பெற்று மோசடி: தேடப்பட்டவா் கைது

சென்னை அடையாறில் வங்கியில் ரூ. 72.55 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அடையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பணியாற்றுப... மேலும் பார்க்க

பெரும்பிடுகு முத்தரையருக்கு தவெக: தலைவா் விஜய் புகழாரம்

போருக்குச் செல்லும் முன்பே தனது வெற்றியை உறுதிசெய்யும் வகையில் மாமன்னா் பெரும்பிடுகு முத்தரையா், வாகை மலா் சூடி போருக்குச் சென்றதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் புகழாரம் சூட்டினாா். மன்னா் பெரும்... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் மே 26-இல் நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக மே 26-ஆம் தேதி முதல் நீா் திறந்து விடப்படவுள்ளது. இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து ... மேலும் பார்க்க