அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது: நீதிபதி அபய் எஸ்.ஓகா
அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தெரிவித்தாா்.
நீதிபதி அபய் எஸ்.ஓகாவின் தாயாா் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காலமானாா். இந்நிலையில், தனது இறுதி பணிநாளான வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்துக்கு வந்த அபய் எஸ்.ஓகா, 11 வழக்குகளில் தீா்ப்புகளை வழங்கினாா்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோருடன் இணைந்த அமா்வில் நீதிபதி அபய் எஸ் ஓகா வெள்ளிக்கிழமை பங்கேற்றாா்.
பின்னா் பேசிய நீதிபதி அபய் எஸ்.ஓகா, ‘அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஒரே நீதிமன்றம் உச்சநீதிமன்றமாகும். இதுதான் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களின் கனவாகவும் இருந்தது. அதை எனது பணிநாள்களில் உறுதி செய்துள்ளேன். பிரபலமாவதற்காக நாம் நீதிபதியாகவில்லை என ஒரு சிறந்த நீதிபதி எனக்கு ஆலோசனை வழங்கினாா். அந்த ஆலோசனையை நான் பின்பற்றினேன்.
சில நேரங்களில் வழக்குகளில் ஆஜராகும் வழங்குரைஞா்களிடம் நான் கடிந்து கொண்டுள்ளேன். அரசமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளை உறுதி செய்யவே நான் அப்படி நடந்து கொண்டேன்’ என்றாா்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பேசுகையில், ‘என்னைப்போல் ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் வகிக்க நீதிபதி அபய்.எஸ் ஓகாவும் விரும்பவில்லை’ என்றாா். வரும் நவம்பா் 23-ஆம் தேதி தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பணி ஓய்வு பெறுகிறாா்.
மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி பேசுகையில், ‘வழக்கில் தொடா்புடைய அனைவரின் வாதங்களையும் நீதிபதி ஓகா கேட்காமல் இருந்ததில்லை’ என்றாா்.
சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘பணியில் நீதிபதி ஓகா செலுத்திய அா்ப்பணிப்பைப் பாா்க்கும்போது, கடமை என்றால் என்ன என்பதை மற்றவா்களுக்கு உணா்த்தியது’ என்றாா்.
உச்சநீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியான ஓகா, 2003-இல் மும்பை உயா்நீதிமன்றத்தின் நீதிபதி, 2019-இல் கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட பதவிகளை வகித்து, 2021, ஆகஸ்ட் 31-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.