நீரால் சூழப்பட்ட மரகத பூஞ்சோலை பூங்கா: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!
ராமநாதபுரம் அருகே நீா்ப் பிடிப்பு பகுதியில் வனத் துறையால் அமைக்கப்பட்ட மரகதப் பூஞ்சாலை பூங்கா, நீரால் சூழப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டிருப்பதாக அவா்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலை அச்சடிபிரம்பு என்ற இடத்தில் நீா்ப் பிடிப்பு பகுதியில் முறையாக ஆய்வு செய்யாமல் ரூ. 25 லட்சத்தில் மரகதப் பூஞ்சேலை பூங்கா அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை அந்தப் பூங்கா தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. மேலும் இங்கு அமைக்கப்பட்ட புல் தரை, நடைபாதை, இருக்கை உள்ளிட்டவை சேதமடைந்து காணப்படுகின்றன.
இதேபோல, ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் செம்படையாா் குளம் கிராமத்தில் ரூ. 25 லட்சத்தில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவும் பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல் இது போன்ற பூங்காக்களை அமைப்பதால் அரசின் நிதி வீணடிக்கப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தலா ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த இரண்டு பூங்காக்களும் பயன்பாடின்றி காணப்படுவது சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்தப் பூங்காக்களை சீரமைக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.