திருவள்ளூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு
திருவள்ளூா் நகராட்சியில் அனைத்து நவீன வசதிகளுடன் ரூ.31.57 கோடியில் புதிய பேருந்து நிலையக் கட்டுமான பணிகளை ஆட்சியா் மு.பிரதாப், துறை அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திருவள்ளூா் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
நகராட்சியில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதித் திட்டம் 2022-2023 மூலம் புதிதாக பேருந்து நிலையம் ரூ.31.57 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளின் தன்மை, பணி முடிவு காலம் ஆகியவை குறித்து கேட்டறிந்தாா். மேலும், பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் பணி ஆள்களை அதிகரித்தும், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் வேண்டும் என உத்தரவிட்டாா்.
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் ரூ.57 லட்சத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினா்கள் சுமாா் 35 போ் வரை தங்கும் அளவில், தேவையான சுகாதார வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும், ஜெயா நகா் பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.62 கி.மீ. தொலைவு ரூ.1 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வுப் பணிகளில் திருவள்ளூா் நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, நகராட்சி பொறியாளா் ஜெயக்குமாா், உதவி பொறியாளா் சரவணன் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.