கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3...
மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை! 3000-ஐ தாண்டிய பாதிப்புகள்!
கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மங்கோலியா நாட்டில் தட்டம்மை தொற்றுப் பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அந்நாட்டில் இதுவரை 3,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 114 புதிய பாதிப்புகள் உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் பாதிப்புகளிலிருந்து 95 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், இந்தத் தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 1,904 ஆக உயர்ந்துள்ளது.
மங்கோலியாவின் மருத்துவர்கள் கூறுகையில், புதியதாக கண்டறியப்பட்டுள்ள பாதிப்புகளில், 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் வெறும் ஒரு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
எனவே, அந்நாட்டுப் பெற்றோர்கள் உடனடியாகத் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்தி அவர்களை தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாக்குமாறு, அந்நாட்டு சுகாதார நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
முன்னதாக, தட்டம்மை பாதிப்பானது, சுவாச துளிகள் மற்றும் நோயாளிகளுடனான நேரடி தொடர்பின் மூலமாக எளிதில் பரவக் கூடும் எனவும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல், சளி, வறட்டு இருமல், வீங்கிய கண்கள் போன்ற அறிகுறிகள் உண்டாகும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தொற்றானது, குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கும் எனக் கூறப்படும் நிலையில், கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் 1,07,500 பேர் தட்டம்மை பாதிப்பினால் பலியாகியுள்ளனர். அதில், பெரும்பாலானோர் குழந்தைகள் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தானை பேசச் சொல்வதே அவமானம்: கொந்தளித்த இந்தியா