மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக சுகாதார அமைச்சர்
கர்நாடகத்தில் கரோனா தொற்று படிபடியாக அதிகரித்துவரும் நிலையில், மக்கள் பீதியடைய அவசியமில்ல என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
கரோனா வைரஸ் தொற்று மக்களை மீண்டும் தாக்கத் தொடங்கியுள்ளதாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொற்றுநோயாக மாறிய கரோனா நோயின் தீவிரத்தை மிகைப்படுத்தாமல், நிலைமையைக் குறித்து துல்லிய தகவலை வழங்குமாறு ஊடகங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பெங்களூரில் மட்டும் 32 பேர் உள்பட மாநிலத்தில் 35 பேர் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. மாநில அரசு விழிப்புடன் இருப்பதாகவும், வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா அதிகரிப்பு குறித்து அவர் கூறுகையில், அதிகளவிலான சோதனைகள் நடத்தப்பட்டதினால், பாதிப்பு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கரோனா கட்டுப்பாடுகள் எதுவுமில்லை, மக்கள் சுதந்திரமாகச் சுற்றி வரலாம். நாட்டின் எந்தப் பகுதிகளுக்கும் மக்கள் சென்று வரலாம்.
சமீபத்திய திடீர் தொற்று, கரோனா வைரஸின் ஒரு துணை வகையான ஜெஎன்-1 மாறுபாடாகும். இது சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கண்டறியப்பட்டன என்று அவர் கூறினார்.