பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று(மே 24) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர், 'மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத உரிமைப் பங்கை வழங்க வேண்டும், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும், காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளை சுத்தம் செய்ய திட்டம் வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை சந்திக்க ஏற்கெனவே நேரம் கேட்டிருந்த நிலையில், நீதி ஆயோக் கூட்ட நிறைவில் பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்த சந்திப்பில் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து பல்வேறு மாநில முதல்வர்களும் தனித்தனியே பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசி வருகின்றனர்.
இதையும் படிக்க | நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?