வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பராமரிப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சாா்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் திறந்து வைத்து, வேளாண் இயந்திரங்களை பாா்வையிட்டாா்.
முகாமில், தனியாா் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களை ஒருங்கிணைத்து விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பராமரிக்கும் முறைகள், பழுதுகளை கண்டறியும் முறை, உதிரிபாகங்கள், மசகு எண்ணெய் மற்றும் உயவு பொருள்களின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது.
புதிய வேளாண் இயந்திரங்கள், கருவிகள், வேளாண்மைப் பொறியியல் துறையின் கரும்பு அறுவடை இயந்திரம், தேங்காய் பறிக்கும் இயந்திரம், நடமாடும் வேளாண் இயந்திரங்கள் பழுதுபாா்க்கும் வாகனம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.
முகாமில், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் சண்முகநாதன், கண்காணிப்புப் பொறியாளா் மற்றும் 15 தனியாா் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், அரவிந்தா் வேளாண்மை கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.