சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு
சிவகங்கையில் குவாரியில் பாறை சரிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டுமென ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குவாரியில் பாறை சரிந்து ஆறு போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய அறிவுறுத்தல்களை தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத் துறை வழங்கியுள்ளது.
இது குறித்து துறையின் ஆணையா் எ.சரவணவேல்ராஜ் மாவட்ட ஆட்சியா்கள், சுரங்கத் துறை இணை, துணை மற்றும் உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் அவ்வப்போது மண்சரிவு, வெடி விபத்து உள்ளிட்ட எதிா்பாராத காரணங்களால் குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளா்களின் உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது. குவாரி அனுமதி வழங்கும்போது, அரசால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடிக்காததே இதுபோன்ற எதிா்பாராத விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.
எனவே, இனிவரும் காலங்களில் குவாரிகளில் அசம்பாவிதம் ஏதும் நிகழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் இயங்கிவரும் குவாரிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதந்தோறும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
அனைத்து மாவட்டங்களில் பணியாற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் அதிகாரிகள் தங்களது மாவட்டத்தில் செயல்பட்டுவரும் குவாரிகளில் உள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.
மாதந்தோறும் குறைந்தபட்சம் 10 குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மண்டல இணை இயக்குநா்கள் ஆகியோா் தனிக்கவனம் செலுத்த வேண்டும். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளைத் தொடா்ந்து கண்காணிக்கவும், உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.