தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அ...
தீராத பிரச்னைகளையும் தீர்க்கும் திங்கட்கிழமை அமாவாசை... கடைப்பிடித்துப் பலன் பெறுவது எப்படி?
சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் ஒரே ராசியில் வரும் நாளே அமாவாசை. பொதுவாக அமாவாசை பித்ருக்களின் வழிபாட்டுக்கு உகந்த நாள். போர் தொடங்க பலி கொடுக்க... வழக்குகளில் வெற்றிபெற... எதிரிகளின் சூழ்ச்சிகளை முடக்க உரிய வழிபாடுகளைச் செய்யவும் அமாவாசை உகந்த நாள். குறிப்பாக உக்கிர தெய்வங்களான துர்கை, பைரவர், பிரத்யங்கிரா, வீரபத்ரர் போன்றோரை அமாவாசை நாளில் வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் ஏராளம் என்பது நம்பிக்கை.
அதிலும் சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானது என்பார்கள் பெரியோர்கள். இந்த நாள்களில் செய்யும் முன்னோர் வழிபாடுகள் அளவற்ற நற்பலன்களைக் கொடுக்கும். சாதாரண அமாவாசையை விட அதிக பலன் தரும் சோம வார அமாவாசை நாளில் காலையில் காக்கைக்கு அன்னம் வைத்துப் பின் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து பின் உணவு உண்டால் சகலவிதமான துன்பங்களும் தீரும் என்பது நம்பிக்கை.

பொதுவாக திங்கட்கிழமைகள் சந்திரனுக்குரியது. சந்திரன் மனோகாரகன். எனவே திங்கட்கிழமைகளில் செய்யும் சிவ வழிபாடு சிவனருளோடு சந்திரனின் அருளையும் பெற்றுத்தரும். இதன் மூலம் மனதில் உள்ள பயம் விலகும். நம்பிக்கை பெருகும்.
பிரச்னைகள் தீர்க்கும் பிரதட்சிணம்... செய்வது எப்படி?
மரங்களின் அரசன் எனப்படுவது அரசமரம். இதை விருட்சக ராஜன் என்று வடமொழியில் கூறுவார்கள். 'மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்' என்பது கீதையில் கண்ணன் வாக்கு. அரசமரத்தின் அடியில் பிரம்மாவும்; நடுப் பாகத்தில் மஹாவிஷ்ணுவும்; மேற்பாகத்தில் சிவபெருமானும் உறைந்தருளுகின்றனர். சகல தேவர்களும் விருப்பமுடன் அரச விருட்சகத்தில் உறைவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அரசமரத்தை தரிசித்தாலும் வணங்கினாலும் பாவங்கள் தீரும். புண்ணியபலன்கள் சேரும். செல்வம் பெருகும். ஆயுள் தீர்க்கமாகும். சோமா வார அமாவாசையில் அரசமரத்தைப் பிரதட்சிணம் செய்பவர்கள் சகல தேவர்களையும் ஒரே நேரத்தில் வலம் வந்து வழிபட்ட புண்ணிய பலனைப் பெறுவர்.
திங்கட்கிழமை அமாவாசை நாளில் அரசரமத்தை வலம் வர, திருமணத்தடைகள் நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். இந்த நாளில் அரச மரத்தை 11 முறை வலம் வந்தால் பாவங்கள் தீரும். 21 முறை வலம் வந்தால் கடன்கள் நீங்கும். 31 முறை வலம் வந்தால் காரிய வெற்றி கிடைக்கும். இந்தப் பிரதட்சிணத்தைக் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்தால் குடும்ப வாழ்க்கை இன்பகரமாக அமையும்.

அரச மரத்தை ஸ்ரீமந் நாராயணனாகவே நினைத்து வலம் வந்து வழிபட்டு, கோயிலுக்கு வரும் சுமங்கலி மற்றும் கன்னிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்குத் தாம்பூலம், மஞ்சள் கிழங்கு ஆகியன தந்து அவர்களின் ஆசிகளைப் பெற தீராத பிரச்னைகளும் தீரும் என்கின்றன ஞான நூல்கள்.
இப்படிப்பட்ட திங்கட்கிழமை அமாவாசை நாளை (26.5.25 ) அன்று வருகிறது. இந்த நாளில் காலை வேளையில் முன்னோர் வழிபாடுகளை முடித்து சிவவழிபாடும் அரசமர பிரதட்சிணமும் செய்து சகல நன்மைகளையும் அடையலாம்.