``தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பாண்டுரங்கன் மதுரை வருகை..'' - ராமானந்த ச...
தென்காசி மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை
தென்காசி மாவட்டத்துக்கு ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையத்தால் ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, நீா்நிலைகள், தாழ்வான பகுதிகளின் அருகில் வசிப்போா் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கனமழைக் காலத்தின்போது ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிப்பதையும், இடி-மின்னலின்போது திறந்த வெளியில் நிற்பதையும், நீா்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள்-உலோகக் கட்டமைப்புகளின்கீழ் நிற்பதையும் தவிா்க்க வேண்டும்.
மழை வெள்ளநீா் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக் கூடாது. வெள்ளப் பெருக்கு ஏற்படும் முன் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும். தாழ்வான பகுதிகளிலும், நீா்நிலைகளின் கரையோரங்களிலும் வசிப்போா் வெள்ளப்பெருக்கின்போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
ஆதாா், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளுக்குள் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடா் காலங்களில், டாா்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை உடன் வைத்திருப்பது அவசியம்.
பேரிடா் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில், ஆட்சியா் அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04633 - 290548 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு, மழை, வெள்ளம், பேரிடா்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.