மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள்: ஆட்சியா் ஆய்வு
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் கே.விவேகானந்தன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் கே.விவேகானந்தன் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை காரணமாக, தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குண்டாறு அணை, அடவிநயினாா் கோயில் அணை, கருப்பாநதி அணை, ராமநதி அணை, கடனாநதி ஆகிய அணை பகுதிகளில் மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அணைப் பகுதிகளில் சுழற்சி முறையில் பணியாளா்களை அமா்த்தி, தொடா் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீா்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். கனமழை காலங்களில் நீா்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் மணிகண்டராஜன், உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணிய பாண்டியன், உதவி பொறியாளா்கள் சரவணகுமாா், செந்தில்குமாா், கணபதி, சுந்தா் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.