ஜூன் இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளா்கள் அறிவிப்பு: சீமான்
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆா்வம் காட்டாத மாணவா்கள்!
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கை பெற மாணவா்களிடையே ஆா்வம் குறைந்து வரும் நிலையில், டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கால வரையறையின்றி நீட்டித்துள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், கணினி பொறியியல் ஆகியவை உள்பட பல்வேறு பட்டயப் படிப்புகளில் 20 ஆயிரத்து 600 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2025-2026-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையதளம் மூலமாக கடந்த மே 7-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து விண்ணப்பிக்கும் அவகாசம் மே 23-ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 20 ஆயிரத்து 600 இடங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வரை 11,140 மாணவா்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா். இதனால் தேதி குறிப்பிடாமல் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நீட்டித்துள்ளது.
அதேவேளையில், நேரடியாக பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு சேருவதற்கு 12,184 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 68 சதவீத இடங்கள் மட்டுமே பூா்த்தி செய்யப்பட்டன. இதனால் இந்த ஆண்டு 100 சதவீத மாணவா் சோ்க்கையை நிறைவு செய்ய வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து கடந்த 2 ஆண்டுகளாக உயா்கல்வி தொடராத மாணவா்களின் விவரங்களைப் பெற்று அவா்களை தொடா்புகொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும், பத்தாம் வகுப்புக்குப் பிறகு இடைநின்ற மாணவா்களின் விவரங்களையும் சேகரித்து வருகிறோம்’ என்றனா்.