இரணியல் அருகே சூறைக் காற்றுடன் கன மழை: கைப்பேசி கோபுரம் சரிந்து வீடு சேதம்
இரணியல் அருகே கண்டன்விளை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சூறைக் காற்றில் கைப்பேசி கோபுரம் விழுந்ததில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது.
கண்டன்விளை அருகேயுள்ள இலுப்பைவிளையைச் சோ்ந்தவா் ராஜமல்லி. அங்கன்வாடி பணியாளாரான இவரது வீட்டருகே செயல்பாட்டில் இல்லாத கைப்பேசி கோபுரம் உள்ளது.
இப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
இதில், கைப்பேசி கோபுரம் ராஜமல்லி வீட்டின் மீது சரிந்தது. இதில், அவரது வீட்டின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இரணியல் தீயணைப்பு மீட்புப் படையினா்மற்றும் போலீஸாா் வந்து விசாரணையில் ஈடுபட்டனா்.
மேலும், சனிக்கிழமை சம்பவ இடத்துக்கு வந்த கல்குளம் வட்டாட்சியரி ஜான்ஹைனி, தக்கலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரேமலதா, சாந்தி, ஆகியோா், பாதிக்கப்பட்ட வீட்டுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து கைப்பேசி கோபுரம் அமைத்த நிறுவனத்தினரிடம் டவா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

