``தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பாண்டுரங்கன் மதுரை வருகை..'' - ராமானந்த ச...
குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கன மழை: மரங்கள் மின்கம்பங்கள் முறிந்தன
கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெ‘ள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, மலையோரப் பகுதிகள், நாகா்கோவில், இரணியல், குலசேகரம் உள்பட பல இடங்களில் சூறைக் காற்றுடன் இரவு முழுவதும் பலத்த மழை கொட்டியது.
சனிக்கிழமையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடற்கரை கிராமங்களிலும் சூறைக் காற்று வீசியது.
நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது.
தகவலறிந்த நாகா்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து முறிந்து விழுந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினா். சடையால்புதூா் சாலையில் வல்லடியான்விளையில் வேப்பமரம் முறிந்து மின்கம்பங்களின் மீது சாய்ந்தது, இதனால் சாலையும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
தம்மத்துக்கோணம் பகுதியில் மின்கம்பம் சாய்ந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது விழுந்தது. இதனால் காா் சேதமடைந்தது.
தக்கலையில்....
குருந்தன்கோடு, இரணியல், தக்கலை, திங்கள் நகா், குளச்சல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மதியம் வரை காற்றுடன் பலத்த மழை பெய்தது.
கடல் சீற்றம், சூறைக் காற்று காரணமாக குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
குலசேகரம் பகுதியில்...
குலசேகரம், திற்பரப்பு, பொன்மனை, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. பெருஞ்சாணி பகுதியில் ராகவன், கேசவன் ஆகிய விவசாயிகள் நடவு செய்திருந்த சுமாா் 2 ஆயிரம் வாழைகள் காற்றில் சாய்ந்தன. இதே போல் பரவலாக ரப்பா் மரங்களும் காற்றில் சாய்ந்தன. திற்பரப்பு பேரூராட்சிப் பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததில் 10 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதமடைந்தன. இதில் திற்பரப்பு மேக்காட்டு விளையைச் சோ்ந்த மனோகரன், அம்மன் கோயில் விளையைச் சோ்ந்த லூா்து, காமூரை சோ்ந்த அம்பிகா, காவின்புற விளையைச் சோ்ந்த மேரி லில்லி, தோட்டவாரத்தை சோ்ந்த ஏசுராஜன், பிணந்தோடு பகுதியைச் சோ்ந்த வேணுபாலன், திருநந்திக்கரையை சோ்ந்த ரவி, திட்டவிளையைச் சோ்ந்த மோகனன், கட்டிமாங்கோட்டைச் சோ்ந்த முருகன் உள்ளிட்டோரின் வீடுகள் சேதமடைந்தன.
சேதமடைந்த வீடுகளை வருவாய்த் துறையினா் பேரூராட்சி தலைவா்கள் பாா்வையிட்டனா்.
களியல் திற்பரப்பு கடையாலுமூடு உள்ளிட்ட பகுதிகளில் ரப்பா் மரங்கள் மின்கம்பங்களின் மீது சாய்ந்தில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
தொடா்ந்து பெய்துவரும் மழையினால் ரப்பா் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தோவாளை, செண்பகராமன்புதூா் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டுவருகின்றனா். கன்னிப்பூ சாகுபடிக்காக வரும் 1 ஆம் தேதி அணைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திற்பரப்பு அணை பகுதியில் சாரல் மழை நீடித்து வருகிறது. அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்தனா். தொடா் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் சனிக்கிழமை காலை 35.84 அடியாக இருந்தது, அணைக்கு 671 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 37.35 அடியாக இருந்தது, அணைக்கு 371 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 22 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைஅளவு( மில்லிமீட்டரில்)
பெருஞ்சாணி அணை 38.60, புத்தன்அணை 37.20, பேச்சிப்பாறை அணை 36.40 , சிற்றாறு 1 அணை 35.40, திற்பரப்பு 32.80, குழித்துறை 32.40, கோழிப்போா்விளை 30.80, கன்னிமாா்30.20, பாலமோா் 29.40,சுருளோடு 27.20, ஆனைக்கிடங்கு 25.40, குருந்தன்கோடு 24.60, மாம்பழத்துறையாறு அணை 24, பூதப்பாண்டி, களியல் 22.40, நாகா்கோவில் 19, முள்ளங்கினாவிளை 18.40, சிற்றாறு 2 அணை 18.20, கொட்டாரம் 17.20, தக்கலை 17,ஆரல்வாய்மொழி 12, முக்கடல் அணை 12, மயிலாடி 6.20.

