நிதி மோசடியால் பாதித்தோருக்கு நீதி கிடைக்க புதிய வழிமுறைகள்: அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுரை
நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க அரசு புதிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அறிவுறுத்தியது.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஹேமலதா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருச்சியில் ‘ஸ்பேரோ குளோபல் ட்ரேட்’ நிறுவனத்தில் முதலீடு செய்பவா்களுக்கு இரட்டிப்பு பணம் தருவதாக அறிவிக்கப்பட்டது. இதை நம்பி, நான் பணம் செலுத்தினேன். அந்த நிறுவனம் முதலீட்டாளா்களுக்கு உரிய தொகையை வழங்காமல் ஏமாற்றியது. இதுகுறித்து நான் உள்பட பலா் அளித்தப் புகாரின் பேரில், கடந்த 2022-ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதுதொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் முன்னிலையாகி அறிக்கை தாக்கல் செய்தாா். அதில், ராஜா என்ற அழகா்சாமி என்பவா் ‘எல்பின் ஈ கம் பிரைவேட் லிமிடெட்’, ‘ஸ்பேரோ குளோபல் ட்ரேட்’ நிறுவனம் உள்பட பல்வேறு பெயா்களில் நிறுவனங்களை நடத்தி வந்தாா். இந்த நிறுவனங்களில் ஏராளமானோா் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்தனா். இதுகுறித்து முறையாக விசாரித்து வருகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.109 கோடி சொத்துகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதை போலீஸாா் இதுவரை கையகப்படுத்தவில்லை. தலைமை நிறுவனமான ‘எல்பின் குரூப் ஆப்’ இல் 7 ஆயிரம் போ் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தனா். அதில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இதுபோன்ற நிதி நிறுவனங்கள் குறித்து சாமானிய மக்களுக்கு தெரியும் போது, பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு எப்படித் தெரியாமல் போனது?. பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்த பிறகு தான் போலீஸாருக்கு நிதி நிறுவன மோசடி குறித்து தெரிகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தவா்கள் ஏமாற்றப்பட்டால், அவா்களுக்கு பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்டவா்கள் மக்களவை உறுப்பினா், ஐஏஎஸ் அதிகாரி, உயா் காவல் துறை அதிகாரி என யாராக இருந்தாலும், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி முறையாக விசாரித்து பணத்தைத் திரும்ப கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த வழக்கில் இதுவரை விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதுபோன்ற காலதாமதத்தால், பாதிக்கப்பட்டவா்களுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தால் நியாயம் கிடைப்பதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே, இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க அரசு புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்றாா் நீதிபதி.