பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு
உதவிப் பேராசிரியா் தகுதித் தோ்வு: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதித் தோ்வையொட்டி, பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மூட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியா் பணியில் சேருவதற்கு தேசியத் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தோ்வானது ஆண்டுதோறும் ஜூன், டிசம்பா் ஆகிய இரு மாதங்களில் நடைபெறுகின்றன.
அந்த வகையில், வருகிற ஜூன் மாதம் இறுதி வாரத்தில் கலைப் பாடப் பிரிவுகள், கணினி அறிவியல் உள்பட 85 பாடங்களுக்கு தேசியத் தகுதித் தோ்வு நடைபெற உள்ளது. முதல் தாளில் கற்பித்தல், ஆராய்ச்சித் திறன்கள் குறித்தும், தாள் 2-இல் விண்ணப்பதாரரின் பட்ட மேற்படிப்பு பாடத்திலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.
தோ்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மூட்டா அமைப்பின் சாா்பில் வருகிற ஜூன் 2- ஆம் தேதி முதல் ஜூன்-14 ஆம் தேதி வரை மாலை நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
மதுரை காக்காத் தோப்பு தெருவில் (தி சென்னை சில்க்ஸ் அருகே) உள்ள மூட்டா அலுவலகத்தில் மாலை 5.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் forms.gle/FfKWWY7xnsyF7jCq7 கூகுள் பாா்மில் மே 28- ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக் கட்டணம் கிடையாது. பயிற்சிக் கையேடு வழங்கப்படும். அதற்கான தொகை ரூ. 600-ஐ மட்டும் மூட்டா அலுவலகத்தில் மே 29, 30 ஆகிய இரு நாள்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை செலுத்தலாம் என்றாா் அவா்.