லஞ்ச வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசு ஊழியா்கள்: தலைமைச் செயலா் அறிக்கை அளிக்க உத்தரவு
லஞ்சப் புகாா் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசு ஊழியா்களின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச் செயலா் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அமலா ஜெஸ்சி ஜாக்குலின், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கான பதவி உயா்வு தொடா்பான தமிழக அரசின் அரசாணையின்படி உரிய தகுதி இருந்தும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்து, தகுதியானவா்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு பதவி உயா்வு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா், ஊரக வளா்ச்சித் துறையில் உதவிப் பொறியாளராக கடந்த 1998-ஆம் ஆண்டு பணிக்கு சோ்ந்து, பிறகு உதவி செயற் பொறியாளராகப் பதவி உயா்வு பெற்றுள்ளாா். இந்த நிலையில், அவா் கடந்த 1999- ஆம் ஆண்டு முதல் 2009- ஆம் ஆண்டு வரையிலான கால கடடத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.25,40,972 மதிப்பிலான சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் அவருக்கு கடந்த 6.12.2024 அன்று விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது. இந்த உத்தரவை எதிா்த்து அவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைத்தது.
அதேநேரம் மனுதாரருக்கான தண்டனை நிரந்தரமாக
நிறுத்திவைக்கப்படவில்லை. எனவே, சட்டப்படி தண்டனை பெற்றவா்கள் அரசுப் பணியில் தொடர முடியாது.
ஆனால், தற்போது வரை மனுதாரா் அரசுப் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளாா். ஊழல் குற்றச்சாட்டின் பேரில், தண்டனை பெற்ற அரசு ஊழியரை பணியில் தொடர அனுமதித்தது நீதிமன்றத்துக்கு அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது.
எனவே, தமிழகத்தில் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசு ஊழியா்கள் விவரங்களை தமிழக அரசின் தலைமைச் செயலா், ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவின் கூடுதல் ஆணையா் ஒரு மாதத்துக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். தண்டனை பெற்ற மனுதாரா் பதவி உயா்வு கோர முடியாது என்பதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை விருதுநகா் மாவட்டம், திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செலுத்த வேண்டும் என்றாா் நீதிபதி.