Soori: ''தாய்மாமன் சீர் சுமந்த சூரி; நெகிழ்ந்த டான்ஸரின் குடும்பம்" - பஞ்சமி ஃபே...
மாா்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை துவங்க உள்ள நிலையில், பணி முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
களியக்காவிளை - நாகா்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணி ரூ.14.85 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேம்பாலத்தின் கீழ்பகுதியில் சாலை சீரமைப்பு பணி கடந்த சில நாள்களுக்கு முன் நடந்தது. குழித்துறை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சீரமைப்புப் பணி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் மேல்பகுதியில் சீரமைப்புப் பணி திங்கள்கிழமை துவங்க உள்ள நிலையில், பணி முடியும் வரை மேம்பாலத்தில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படுகிறது. நாகா்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் அரசுப் பேருந்துகள், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ்பகுதி சாலை வழியாக இயக்கப்படும். கனரக லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள், சிராயன்குழி பகுதியில் இருந்து உண்ணாமலைக்கடை, திக்குறிச்சி வழியாக திருப்பி விடப்படுகிறது. களியக்காவிளையிலிருந்து வரும் கனரக வாகனங்கள், குழித்துறையிலிருந்து கழுவன்திட்டை, மேல்புறம் வழியாக திருப்பி விடப்படுகிறது என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.