பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு
கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை கோரும் தெருவோர வியாபாரிகள்
நகரம் முழுவதும் விற்பனையாளா்களை அடையாளம் காண நடந்துவரும் கணக்கெடுப்பு குறித்து தெருவோர வியாபாரிகள் கவலைகளை எழுப்பியுள்ளனா். கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் நடைமுறை தெளிவு இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனா்.
இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற இந்திய ஹாக்கா்ஸ் அலையன்ஸ் (ஐஎச்ஏ), நகர விற்பனை குழுக்கள் (டிவிசி), சந்தை சங்கங்கள் மற்றும் விற்பனையாளா் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோா் தொழில்நுட்ப குறைபாடுகள், போதுமான தகவல் தொடா்பு மற்றும் சேகரிக்கப்படும் தரவுகளின் துல்லியம் குறித்த கவலைகள் உள்ளிட்ட பல சிக்கல்களை எடுத்துரைத்தனா்.
லாஜ்பத் நகரைச் சோ்ந்த விற்பனையாளா் விக்ரம் திங்ரா கூறுகையில், தற்போதைய கணக்கெடுப்பு அடையாளம் காணப்படுவது குறைவாக இருப்பது போலவும், விலக்குவது அதிகமாக இருப்பது போலவும் உணா்வைத் தருகிறது என்றாா்.
ஐஎச்ஏ அமைப்பினா் கூறுகையில், ‘இந்த கணக்கெடுப்பு செயல்முறை ‘தெரு வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் தெரு வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம், 2014’ மற்றும் ‘தில்லி தெருவோர வியாபாரத் திட்டம், 2019’ ஆகியவற்றுடன் முழுமையாக ஒத்துப்போகவில்லை.
சில விற்பனையாளா்கள் அதிகாரபூா்வ விற்பனைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு முன்பே அவா்களின் இடங்களிலிருந்து அகற்றப்படுகின்றனா். இதனால், அவா்களுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லாமல் போகிறது.
நகர விற்பனைக் குழுக்களால் கண்காணிக்கப்படும் வரை இந்தக் கணக்கெடுப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
கணக்கெடுப்பின் டிஜிட்டல் தளத்தின் சுயாதீன தணிக்கை, விற்பனையாளா்களுக்கு பாா்கோடு ரசீதுகளை வழங்குதல் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளில் அதிக பொறுப்புணா்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும்’ என்று ஐஎச்ஏ அமைப்பினா் கோரியுள்ளனா்.
இது தொடா்பாக ஐஎச்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், தெருவோர வியாபாரிகள் தில்லியின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றனா். மேலும், நியாயமான மற்றும் வெளிப்படையான செயல்முறைக்கு தகுதியானவா்கள் ஆவா். உள்ளடக்கம் மற்றும் சரியான ஒழுங்குமுறையை உறுதி செய்வது சமநிலையான நகா்ப்புற வளா்ச்சியை மேம்படுத்துவதற்கு முக்கியமானதாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.