தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அ...
தண்ணீா் நெருக்கடி குறித்த அதிஷியின் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை: பாஜக
தில்லியில் தண்ணீா் நெருக்கடி இருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி சுமத்திய குற்றச்சாட்டுகள் புனையப்பட்ட பொய் என்று பாஜக கூறியுள்ளது.
தண்ணீா் நெருக்கடி தொடா்பாக முதல்வா் ரேகா குப்தாவுக்கு அதிஷி கடிதம் எழுதியுள்ள நிலையில், பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவற்றை புனையப்பட்ட பொய் என்று கூறியுள்ளது.
மேலும், தற்போதைய நிலைமைக்கு முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தின் தோல்விகள்தான் காரணம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:
நகரில் பெரிய அளவிலான தண்ணீா் நெருக்கடி இல்லை. எந்தவொரு கடுமையான இடையூறையும் தடுத்ததற்கு தற்போதைய அரசாங்கத்தின் கோடைகால செயல் திட்டம்தான் காரணம்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களிடம் ஒரு அரசியல் பிரசாரம் உள்ளது. அது ஒவ்வொரு நாளும் ஒரு பொய்யை கூறுவதுதான். இந்த பொய்ப் பிரசாரத்தின்கீழ், தில்லியில் கடுமையான தண்ணீா் நெருக்கடி இருப்பதாக அதிஷி ஒரு பொய்யை இட்டுக்கட்டி கூறியுள்ளாா்.
கோடையின் உச்சக்கட்ட வெப்பம் இருந்தபோதிலும், கோடைக்கால செயல் திட்டத்தை திறம்பட செயல்படுத்துதல், மேம்பட்ட தண்ணீா் விநியோகம் மற்றும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தண்ணீா் டேங்கா்கள் காரணமாக தில்லியில் ஒரு பெரிய தண்ணீா் நெருக்கடி ஏற்படும் என்ற பேச்சு பரவலாக ஏதும் இல்லை.
ஆம் ஆத்மி அரசாங்கத்தின்கீழ் தண்ணீா் பிரச்னைகள் தொடா்பாக கடந்த ஆண்டு இதே நேரத்தில் தில்லியில் பரவலான புகாா்கள் மற்றும் போராட்டங்கள் நடந்தன. ஆனால், நிகழாண்டு அத்தகைய அறிக்கைகள் எதுவும் இல்லை.
தண்ணீா் பற்றாக்குறை இல்லை என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் தண்ணீா் நெருக்கடி இல்லை என்றுதான் கூறுகிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் அரவிந்த் கேஜரிவால் அரசாங்கம் நீா் சேமிப்புத் திறனை அதிகரிக்கவும், திருட்டு மற்றும் வீணாவதைத் தடுக்கவும் தவறியதே தண்ணீா்ப் பற்றாக்குறைக்கு மூல காரணம். நிலைமை மோசமடையாமல் இருக்க பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.