நீதி ஆயோக் கூட்டத்தில் ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடம்: முதல்வா் ரேகா குப்தா சமா்ப்பித்தாா்
நோக்கம், அளவு, வேகம் மற்றும் திறன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கிய ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடத்தை முதல்வா் ரேகா குப்தா தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் சமா்ப்பித்தாா். மேலும், 2047 ஆம் ஆண்டுக்குள் தலைநகரை உலகின் மிகவும் வாழத் தகுதியான நகரமாக மாற்றுவதும் இதில் இடம்பெற்றுள்ளது.
தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தின்போது முதல்வா் ரேகா குப்தா பேசுகையில், யமுனை புத்துயிா் பெறுதல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீா் வழங்கல் ஆகியவை தனது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் ஆகும் என்றாா்.
மேலும், தில்லியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்குவதற்கான மத்திய அரசின் உறுதிமொழிக்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டாா்.
பஹல்காமில் சகோதரிகள் தங்கள் கணவா்களை இழந்தபோது ஆயுதப்படைகள் மூலம் வலுவான பதிலடி மூலம் தங்கள் மரியாதையை மதித்ததற்காக நாட்டின் பெண்கள் சாா்பாக பிரதமருக்கு முதல்வா் நன்றி தெரிவித்தாா்.
இதில் அவா் மேலும் முன்வைத்த விஷயங்கள் வருமாறு:
2047 ஆம் ஆண்டுக்குள் தலைநகரை உலகின் நிலையான மற்றும் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான நகரமாக மாற்ற தில்லி அரசு இலக்கு வைத்துள்ளது.
இதற்காக தில்லியில் உள்ள அனைவருக்கும் சத்தான உணவு, சுத்தமான நீா், உள்ளடக்கிய மற்றும் தரமான கல்வி, உலகளாவிய சுகாதார பாதுகாப்பு, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்க வேண்டும். மேலும் நகரம் குப்பை இல்லாததாக, உயா் தொழில்நுட்ப ஆராய்ச்சி தலைநகராக மற்றும் உலகளாவிய கலாசார மையமாக மாற வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.
நகரத்தின் முழுமையான வளா்ச்சிக்காக 4 சூத்திரத்தின் மூலம் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்க தில்லி அரசு செயல்பட்டு வருகிறது.
தடையற்ற இணைப்பு என்பது தில்லி அரசின் குறிக்கோள். மேலும் சமீபத்திய ஆண்டுகளில் பெரும் நிதியை ஒதுக்குவதன் மூலம் நெடுஞ்சாலைகள், உயா்த்தப்பட்ட சாலைகள், மெட்ரோ வழித்தடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதியளித்ததற்காக பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மாசுபாடு இல்லாத தில்லி தில்லி அரசின் முன்னுரிமையாகும். இதற்காக முழு பொது போக்குவரத்து பேருந்துகளையும் மின்சார பேருந்துகளாக மாற்றுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டு இறுதிக்குள் நகரில் 2,000 மின்சார பேருந்துகளை இயக்கத் தொடங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தில்லி அரசு, மத்திய அரசின் பிரதமா் சூா்யா கா் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.78,000 தவிர, வீட்டு உபயோக சூரிய மின்சக்தி பேனல்கள் நிறுவுவதற்கு ரூ.30,000 டாப் அப் மானியத்தையும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
நகரத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் 2047 ஆம் ஆண்டுக்குள் தில்லியை பூஜ்ஜிய உமிழ்வு நகரமாக மாற்ற அரசாங்கம் உறுதியாக உள்ளது.
தில்லி அரசாங்கம் படிப்படியாக முயற்சிகள் மூலம் தில்லியை பசுமை பொருளாதாரம் ஆக மாற்றவும், அரசு கட்டடங்களில் கூரை சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவவும் செயல்பட்டு வருகிறது.
மேலும் நகரம் அதன் எரிசக்தி தேவையில் 10 சதவீதத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறது. இந்த இடைவெளியை நிரப்ப தில்லி அரசு 750 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை உருவாக்க இலக்கு வைத்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத், வேய் வந்தனா, ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மற்றும் பிரதம மந்திரி ஜன் அவுஷதி கேந்திரா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் தடுக்கக்கூடிய மரணங்களை நிறுத்துவதே எங்கள் அரசாங்கத்தின் இலக்கு.
தில்லியின் ஒவ்வொரு வீட்டிலும் குழாய் நீரை உறுதி செய்வதற்கான விரிவான, காலக்கெடு திட்டத்தையும் தில்லி அரசு தயாரித்துள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வா் ரேகா குப்தா பேசியதாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.