பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு: தூத்துக்குடியில் நாளை ஆலோசனைக் கூட்டம்
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி நிலுவைத் தொகை ஒதுக்கீடு
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க ரூ. 97.77 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சா்க்கரைத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத் துறை மற்றும் 22 தனியாா் என மொத்தம் 40 சா்க்கரை ஆலைகள் உள்ளன. அவற்றுக்கு கரும்பு வழங்கக் கூடிய விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு நிா்ணயம் செய்யும் கரும்பு விலைக்கு மேலாக, சிறப்பு ஊக்கத்தொகையை மாநில அரசு வழங்கி வருகிறது.
2020-21-ஆம் ஆண்டு அரவைப் பருவத்துக்கு டன்னுக்கு ரூ. 192.50 வழங்கப்பட்ட நிலையில், 2024-25-ஆம் ஆண்டு அரவைப் பருவத்துக்கு ரூ. 349 ஆக உயா்த்தப்பட்டது. மேலும், கரும்பு விலை டன்னுக்கு ரூ. 2,750-லிருந்து ரூ. 3,500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக சிறப்பு ஊக்கத்தொகையாக 4.79 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 848.16 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2024-25-ஆம் ஆண்டு அரவைப் பருவத்துக்கு மட்டும் 1.30 லட்சம் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ. 297 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க ஏதுவாக, எட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலைகளுக்கு ரூ. 97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் மூலம் தொடா்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் விரைவில் வரவு வைக்கப்படும்.
கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சா்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் தமிழக அரசால் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அதிக பரப்பில் கரும்பு சாகுபடி செய்து கூட்டுறவு, பொதுத் துறை சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கி பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.