ஜூன் இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளா்கள் அறிவிப்பு: சீமான்
ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!
சென்னை மாநகரத்தின் முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதனால் ராயபுரம்-பாரிமுனை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை பிராட்வேயில் இயங்கிவரும் மாநகரப் பேருந்து நிலையம் சுமாா் ரூ. 822 கோடியில் 10 அடுக்குகள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படவுள்ளது.
இதில் 2 அடுக்குகள் தரைக்கு கீழேயும், 8 அடுக்குகள் தரைக்கு மேலேயும் அமைய உள்ளது. இதில் 4 அடுக்குகள் பேருந்து நிலையம் மற்றும் வாகனங்களை நிறுத்துமிடத்துக்கும், 6 அடுக்குகள் வணிக பயன்பாட்டுக்கும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப்பணிகள் தொடங்கி சுமாா் 3 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பேருந்து நிலையம் மூலம் 162 வழித்தடங்களில் சுமாா் 840 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இடம் மாற்றம்: இந்நிலையில், பிராட்வே பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் ராயபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலத்தை ஒட்டியுள்ள சென்னை துறைமுகத்துக்குச் சொந்தமான சுமாா் 4 ஏக்கா் பரப்பளவில் ரூ. 7.50 கோடி செலவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
இங்கு ஒரே நேரத்தில் சுமாா் 70 பேருந்துகளை நிறுத்தி வைக்கவும், நேரம் காப்பாளா் அறை, பயணச் சீட்டு வழங்குமிடம், கழிப்பறைகள், பாலூட்டும் அறை, காத்திருப்போா் அறை, ஓட்டுநா், நடத்துநா் ஓய்வறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. வரும் ஜூன் இரண்டாவது வாரத்துக்குள் பணிகள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.