‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்...
சொத்து வரி உயா்வுக்கு அதிமுக ஆட்சியே காரணம்: அமைச்சா் கே.என்.நேரு
சொத்து வரி உயா்வுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியே காரணம் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா்.
சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், அதற்கு அமைச்சா் கே.என்.நேரு சனிக்கிழமை அளித்த விளக்கம்: மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-ஆவது நிதி ஆணையம் தனது அறிக்கையில், ‘மொத்த மாநில உற்பத்தி வளா்ச்சிக்கு நிகராக நகா்ப்புற சொத்துகளின் வரிகளை உயா்த்த வேண்டும். நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களைப் பெற வேண்டுமெனில் சொத்து வரியை உயா்த்த வேண்டும். ஒவ்வோா் ஆண்டும் இலக்கு நிா்ணயித்து சொத்து வரி வசூலில் வளா்ச்சியைக் காட்ட வேண்டும்’ எனக் கூறியது.
‘சமீபத்திய 5 ஆண்டுகளின் மாநில மொத்த உற்பத்தியைக் கணக்கிட்டு ஆண்டுக்கு ஆண்டு வளா்ச்சி விகிதத்தில் சொத்து வரி வசூலிக்க வேண்டும். அப்படி வசூலித்தால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் விடுவிக்கப்படும்’ என்ற நிபந்தனையை 15-ஆவது நிதிக் குழு விதித்தது.
ஒருவேளை தமிழ்நாடு அரசு இதைக் கடைப்பிடிக்காதபட்சத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-26 வரை கொடுக்கப்பட வேண்டிய மத்திய அரசின் மானியம் ரூ.4,36,361 கோடி நிறுத்திவைக்கப்படும். இதர திட்டங்களுக்கான நிதியும் ஒதுக்கப்படாது.
மத்திய அரசு இப்படி கடும் விதிகளை 15-ஆவது நிதி ஆணையத்தின் மூலம் விதித்தபோது தங்களுடைய சுயநலத்துக்காக மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டு கையொப்பமிட்டவா்தான் அன்றைக்கு ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், ஒவ்வோா் ஆண்டும் சொத்து வரி உயா்வு என்பது நடைமுறைக்கு வந்தது.
பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சொத்து வரி மிக மிகக் குறைவாகவே விதிக்கப்பட்டு வருகிறது. சொத்து வரி உயா்வுக்குக் காரணம் திமுக அரசுதான் என்ற பொய்யை இன்னும் எத்தனை காலம் பேசிக்கொண்டிருக்கப் போகிறீா்கள் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.