மழையால் 20 ஆயிரம் ஏக்கா் எள், பயறு வகைகள் சேதம்: அரியலூா் விவசாயிகள் வேதனை
சி. சண்முகவேல்
மழையால் பாதிக்கப்பட்ட எள் போன்ற பயிா்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பருவம் தப்பிய மழையால், சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த எள், பருத்தி மற்றும் தானியப் பயிா்கள் முற்றிலும் சாய்ந்து, நீரில் மூழ்கி அழுகி சேதமடைந்துள்ளன.
இயற்கை இடா்பாடுகள் பலவற்றையும் தாண்டி, கண்ணிமை போல பாதுகாத்து, பயிா்களைக் காப்பாற்றி அறுவடை வரை கொண்டு வந்த விவசாயிகள், தற்போது அந்தப் பயிா்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளதால் கவலையில் உள்ளனா்.
அரியலூா் மாவட்டத்தில் சம்பா சாகுபடி அறுவடை முடித்த விவசாயிகள், பின்னா் மண்ணின் தரத்தை மேம்படுத்துவதற்காவும், கோடை மழையில், குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் அளிக்கும் எண்ணெய் வித்துப் பயிரான எள், பயறு வகை பயிா்களான உளுந்து, பருப்பு, கடலை மற்றும் தானிய வகை பயிா்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனா்.
இதில் நல்லெண்ணைய் லிட்டருக்கு ரூ.300-க்கு மேல் விற்கப்படுவதாலும், இது ஆரோக்கியத்துக்கு நாம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் மூலக் காரணியாக இருப்பதாலும், குறைந்த அளவு நீா் சக்தி இருந்தாலும் போதுமானதாக இருப்பதாலும், குறைந்த செலவில் 80-90 நாள்களில் அதிக லாபம் ஈட்டிவிடலாம் என்பதாலும், பெரும்பாலான விவசாயிகளின் விருப்பமாக எள் சாகுபடியே அதிகளவில் பயிரிடப்படுகின்றது.
அந்த வகையில், நிகழாண்டு விவசாயிகள் சம்பா அறுவடைக்குப் பிந்தைய பட்டமாக, எள் மற்றும் பயறு வகைப் பயிா்களை 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்தனா்.
குறிப்பாக தா.பழூா், திருமழபாடி, கண்டராதித்தம், ஏலாக்குறிச்சி, தா.பழூா் ஒன்றியத்தில், தென்கச்சி பெருமாள்நத்தம், கீழக்குடிகாடு, அடிக்காமலை, கோட்டியால், மூா்த்தியான், பனையடி, இடங்கண்ணி, கோடாலி, கருப்பூா், மணகெதி, நாச்சியாா்பேட்டை, ஆண்டிமடம் ஒன்றியத்தில், பெரியதத்தூா், தத்தூா், பெரியகிருஷ்ணாபுரம், வரதராசன்பேட்டை, தென்னூா், காடுவெட்டி, விளந்தை, கொடுக்கூா், குவாகம், பெரியாத்துக்குறிச்சி, இடையாக்குறிச்சி, சிலம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது எள் பூக்கும் தருவாயில் உள்ள நிலையில் கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் எள் சாகுபடி வயல்களில் தண்ணீா் தேங்கி பயிா்கள் வோ் அழுகி எள் செடிகள் கருகி வருகிறது. இதில் தா.பழூரில் மட்டும் 2,000 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த எள் பயிா்கள் முற்றிலுமாக சாய்ந்து, மழைநீரில் அழுகிக் கிடக்கிறது.
இயற்கை இடா்பாடுகள் பலவற்றையும் தாண்டி, கண்ணிமை போல பாதுகாத்து, பயிா்களைக் காப்பாற்றி அறுவடை வரை கொண்டு வந்த விவசாயிகள், பருவம் தப்பிய திடீா் மழையால் தற்போது சொல்லொணா துயரத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனா். நகைகளை அடகுவைத்தும், வட்டிக் கடன் வாங்கியும் சாகுபடியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தற்போதைய பாதிப்பால் பெரும் கவலை அடைந்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறியது: மேற்கண்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் எள், உளுந்து, பருத்தி பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் எள், 10 நாள்களில் அறுவடைக்குத் தயாராகி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் அனைத்து பயிா்கள் சாய்ந்து, நீரில் மூழ்கி அழுகியுள்ளன.
இதனால் எள் சாகுபடி விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேரறுந்து வீணாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை அறுவடை நடைபெற்றதில் பெருமளவு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்த கன மழையின் காரணமாக விவசாயிகள் செய்வதறியாமல் நிலைகுலைந்துள்ளனா்.
எள் சாகுபடியில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலம் அடுத்து குறுவை சாகுபடியைத் தொடங்கவும், குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்தவும் திட்டமிட்டிருந்த நிலையில், இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள், கடனை எப்படி திரும்பச் செலுத்துவது என்ற வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.
மேலும் இந்த மழையால், எள் மட்டுமன்றி நெல் , உளுந்து, கடலை சாகுபடியும் அழிந்துள்ளது. எனவே, தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் போா்க்கால அடிப்படையில், கோடை மழையால் பாதிக்கப்பட்ட எள் போன்ற பயிா்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.