சிறுகடம்பூா் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகடம்பூரிலுள்ள செல்லியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சிறுகடம்பூா் கிராமத்தில் விநாயகா், செல்லியம்மன், மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதையடுத்து தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தோ் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே சென்று நிலையை அடைந்தது.
தோ் வந்தபோது அனைத்து வீடுகளிலும் மக்கள் தேங்காய் உடைத்து, மாவிளக்கு படைத்து வழிபட்டனா். தொடா்ந்து இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.