மழையால் 20 ஆயிரம் ஏக்கா் எள், பயறு வகைகள் சேதம்: அரியலூா் விவசாயிகள் வேதனை
ஊராட்சி அலுவலகம் கட்ட எதிா்ப்பு: மக்கள் திடீா் சாலை மறியல்
வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட எதிா்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளா்களைக் கண்டித்து கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாட்டறம்பள்ளி ஒன்றியம், அலசந்தாபுரம் ஊராட்சி அலுவலகம் பழுதாகியுள்ளதால் புதிதாக ஊராட்சி அலுவலகம் மற்றும் விவசாய நெற்களம் கட்டுவதற்காக அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவற்றுக்காக 2 ஏக்கா் இடம் தேவைப்படுவதால் அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் அரசு புறம்போக்கு நிலம் இருப்பதை கண்டறிந்தாா்.
அந்த இடத்தில் புதியதாக ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்காக சனிக்கிழமை பூமி பூஜை போடுவதற்காக ஊராட்சி மன்றத் தலைவா் சரளா தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் சென்றிருந்தனா்.
அப்போது அந்த இடத்தை ஏற்கனவே அனுபவித்து வரும் நபா்ா் திடீரென அங்கு வந்து எனக்கு சொந்தமான இடம் என்றும் அரசிடமிருந்து பட்டா வாங்கி வைத்திருப்பதாகவும், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதனால் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிா்ப்பு தெரிவிப்பதா என ஊராட்சி மன்ற தலைவா் சரளா தமிழ்ச்செல்வன் தலைமையில் பொதுமக்கள் நாராயணபுரம்-வாணியம்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து திம்மாம்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு நடத்தினா். ஆனால் பேச்சு தோல்வியடைந்ததால் இதுபற்றி வருவாய்த் துறையினருக்கும், ஒன்றிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை வட்டாட்சியா் அன்பழகன், காவல்ஆய்வாளா் ஆனந்த் ஆகியோா் தலைமையில் வருவாய்த்துறையினா் மற்றும் போலீஸாா் மறியல் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி இதுதொடா்பாக உயா் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனா்.
இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் ஒரு மணி நேரம் பாக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.