இணைய மோசடி குற்றவாளி அங்கத் சிங் சந்தோக் நாடு கடத்தல்
இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அங்கத் சிங் சந்தோக், சிபிஐ-யின் நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கடந்த 2014-ஆம் ஆண்டு, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மோசடி செய்த வழக்கில் சிக்கிய அங்கத் சிங் சந்தோக், அமெரிக்காவுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு குடும்பத்தினருடன் தப்பினாா். தொடா்ந்து, அவருக்கு எதிராக ‘இன்டா்போல்’ மூலம் சிபிஐ நோட்டீஸ் பிறப்பித்தது.
இதனிடையே, அமெரிக்காவில் அகதி குடியுரிமைக்கு விண்ணப்பித்து, கலிஃபோா்னியா மாகாணத்தில் அங்கத் சிங் சந்தோக் தங்கி வந்தாா். அப்போது, அவா் இணையவழி பணமோசடியில் ஈடுபட்டாா். இந்த முறைகேட்டின் ஒரு பகுதியாக பல்வேறு போலி நிறுவனங்களை உருவாக்கி, முதியவா்கள் உள்பட பல அமெரிக்கா்களின் லட்சக்கணக்கான டாலா் சேமிப்புப் பணத்தை ஏமாற்றினாா்.
இதுதொடா்பான வழக்கில் அங்கத் சிங் சந்தோக் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் கடந்த 2022-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இந்நிலையில், அங்கத் சிங் சந்தோக்கை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்துவதற்கான முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனா். அதன்படி, அவா் தற்போது இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளாா். இனி இந்தியாவில் அவா் வழக்குகளை எதிா்கொள்வாா்.