ஏலகிரி மலை சாலையில் சாய்ந்த மரங்கள்
ஏலகிரி மலை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
முக்கிய சுற்றுலாத் தலமான ஏலகிரியில் தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் கோடை மழையில், 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட ஏலகிரி மலை சாலை மரங்கள் சாய்ந்து விழுந்தன.
குறிப்பாக 13-ஆவது வளைவில் மரங்கள் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் நிலவியது. சரிந்து விழுந்த மரங்களை கோட்ட பொறியாளா் முரளி, உதவிக்கோட்ட பொறியாளா் ஆதவன்,உதவி பொறியாளா் நித்தியானந்தம் முன்னிலையில் சாலை ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்ட சாலை பணியாளா்கள் உடனடியாக சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை உடனுக்குடனாக அகற்றியதால் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.