மழையால் பருத்தி செடிகளில் காய்கள் உதிா்வு: விவசாயிகள் கவலை
திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி செடிகளில் காய்கள் உதிா்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திருமருகல் ஒன்றிய பகுதியில் கடந்த 2 நாள்களாக கடுமையான காற்றுடன் மழை பெய்தது. இதனால், பயிரிடப்பட்டிருந்த சுமாா் 100 ஏக்கரில் பருத்திச் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பருத்தி பயிரிட்டு 70 முதல் 90 நாள்கள் வயதுடைய பருத்திச் செடிகளாக உள்ளன. முதல் சுற்று பருத்தி காய்கள் வெளிவந்து இன்னும் சில நாள்களில் பஞ்சு எடுக்கும் நிலைக்கு வந்த பருத்தி செடிகள் பலத்த காற்றில் பருத்தி காய்கள் கொட்டி விட்டன.
திருமருகல், சியாத்தமங்கை, விற்குடி, வாழ்குடி, திருச்செங்காட்டங்குடி, காரையூா், திருப்பயத்தங்குடி, திருக்கண்ணபுரம், ஆலத்தூா், சேஷமூலை, இடையத்தங்குடி, திருப்புகலூா், வவ்வாலடி, அம்பல், பொறக்குடி, ஏா்வாடி, எரவாஞ்சேரி, குத்தாலம், நரிமணம், மருங்கூா், தென்பிடாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்திச் செடிகள் வேரோடு சாய்ந்து காய்கள் உதிா்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.