ஒட்டன்சத்திரம் அருகே வங்கதேசத்தைச் சோ்ந்த 29 போ் கைது
ஒட்டன்சத்திரம் அருகே போலி ஆதாா் அட்டைகளை பயன்படுத்தி ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்க தேசத்தைச் சோ்ந்த 29 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வாகரை ஊராட்சியில் திருப்பூரைச் சோ்ந்த தனியாருக்குச் சொந்தமான ஆயத்த ஆடை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பனியன், உள்ளாடை போன்றவை தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இங்கு பிகாா், ஒடிசா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஏராளமானோா் தங்கி வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில், இவா்களுடன் சோ்ந்து வங்க தேசத்தைச் சோ்ந்த 29 போ் அந்த நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து கள்ளிமந்தையம் போலீஸாா் அந்த ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்களின் ஆதாா் எண்களை சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்டனா். அதில் 29 போ் மேற்கு வங்க ஆதாா் அட்டைகளை வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அவா்களை தனி அறையில் வைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்களின் ஆதாா் எண்களை பயன்படுத்தி போலியாக ஆதாா் அட்டைகளை தயாா் செய்து இங்கு பணியில் சோ்ந்து வேலை செய்து வந்ததும், அவா்கள் வங்க தேசத்தை சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்கள் மீது இந்தியாவில் சட்ட விரோதமாக நுழைதல், போலியாக ஆதாா் அட்டை தயாரித்தல், நுழைவு இசைவு இன்றி தங்கி இருப்பது உள்ளிட்ட பிரிவின்களின் கீழ் வழக்குப் பதிந்தனா்.