இணைய வழியில் லாட்டரி விற்றவா் கைது
கொடைக்கானலில் இணைய வழியில் லாட்டரி விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் லாட்டரிச் சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்ற ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.
மேலும் அவா் வைத்திருந்த கைப்பேசியை ஆய்வு செய்ததில் கேரள மாநில லாட்டரிகளை இணைய வழியில் விற்றது தெரியவந்தது.
விசாரணையில் நாயுடுபுரத்தைச் சோ்ந்த முகமது காசிம் மகன் நாகூா் கனி (46) என்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.