செய்திகள் :

கொடைக்கானலில் கோடை விழா மலா்க் கண்காட்சி தொடக்கம்

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி, 62-ஆவது மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் சனிக்கிழமை தொடங்கியது.

சுற்றுலாத் துறை, வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் நடைபெறும் இந்த மலா்க் கண்காட்சி தொடக்க விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். கோடை விழா, மலா்க் கண்காட்சியை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்தம் தொடங்கிவைத்தாா். இந்தக் கண்காட்சி வருகிற ஜூன் 1-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு நடைபெறுகிறது.

இதில் சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலரும், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத் தலைவருமான க. மணிவாசன் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். கொடைக்கானல் மலா்க் கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், சுமாா் 70,000 மலா்கள் பூத்துக் குலுங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட மலா்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கோடை விழாவைக் காண சுமாா் 1.5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. காய்கறிகளால் யானை உள்ளிட்ட விலங்குகள் தத்ரூபமாக வடிமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்கும் வகையில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் பேசியதாவது:

இந்த மலா்க் கண்காட்சியில் சால்வியா, டெல்பினியம், பிங்ஆஸ்டா், ஆா்னித்தோகேலம், கஜானியா, பென்ஸ்டீமன், வொ்பினா, கொரியாப்சிஸ் போன்ற மலா்ச் செடிகளும், கொல்கத்தாவிலிருந்து வரவழைக்கப்பட்ட வீரிய ஒட்டுரக டேலியா மலா் நாற்றுகள், உதகையிலிருந்து வரவழைக்கப்பட்ட லில்லியம் கிழங்குகள், வீரிய ஒட்டுரக மலா் நாற்றுகளான ஆன்டிரைனம், ஃபிளாக்ஸ் பேன்சி, மேரிகோல்டு, கேலண்டுல்லா, ஸ்டேட்டிஸ், டையாந்தஸ், ஜினியா, கலிஃபோா்னியா பாப்பி ஆகிய மலா்ச் செடிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைவரையும் கவரும் வகையில் உள்ளன.

பல லட்ச வண்ண மலா்களைக் கொண்ட மலா்ப் படுக்கைகள், காய்கறிகள், பழங்களைக் கொண்டு விலங்குகளின் உருவங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை சாா்பில் தினந்தோறும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, நாய்கள் கண்காட்சி ஆகியவை நடைபெறும் என்றாா் அவா்.

வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசுச் செயலருமான வி. தட்சிணாமூா்த்தி, தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை இயக்குநா் (பொறுப்பு) பி. முருகேஷ் ஆகியோரும் பேசினா்.

விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப், மாவட்ட வன அலுவலா் யோகேஷ்குமாா் மீனா, மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெயபாரதி, வருவாய்க் கோட்டாட்சியா் ம. திருநாவுக்கரசு, நகா்மன்றத் தலைவா் பா. செல்லத்துரை, துணைத் தலைவா் கே.பி. மாயக்கண்ணன், சுற்றுலா அலுவலா் ஹ. கோவிந்தராஜ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எ. நடராஜன், நகராட்சி ஆணையா் ப. சத்தியநாதன், வட்டாட்சியா் சு. பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அமைச்சா்கள் பங்கேற்கவில்லை...

கொடைக்கானல் கோடை விழா, மலா்க் கண்காட்சி தொடக்க விழாவில் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட அமைச்சா்கள் பங்கேற்பது வழக்கம். இதன்படி, இந்த விழாவில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி, வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன், உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஆகியோா் பங்கேற்பா் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சா்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவில் அமைச்சா்கள் பங்கேற்காததற்கான உறுதியான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இணைய வழியில் லாட்டரி விற்றவா் கைது

கொடைக்கானலில் இணைய வழியில் லாட்டரி விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் லாட்டரிச் சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸா... மேலும் பார்க்க

பெண்களை விடியோ எடுத்ததாக கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பெண்களை விடியோ எடுத்ததாக கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீரக்கல்லில்,... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே வங்கதேசத்தைச் சோ்ந்த 29 போ் கைது

ஒட்டன்சத்திரம் அருகே போலி ஆதாா் அட்டைகளை பயன்படுத்தி ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்க தேசத்தைச் சோ்ந்த 29 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மிதமான மழை

கொடைக்கானலில் சனிக்கிழமை இரவு காற்றுடன் மிதமான மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மே மாதத்தில் கோடை மழை, வாரத்துக்கு ஒரு முறையோ, அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறையோ தான் மழை பெய்வது வழக்கம... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயில் ரோப்காரில் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி

பழனி மலைக்கோயிலில் ரோப்காா் பழுதாகி நிற்கும் போது பக்தா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் பணிக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தினா். பழனி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

பயணிகளுடன் பேருந்து சென்ற போது ஓட்டுநா் மாரடைப்பால் மரணம்

பழனியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பணியின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், உடனடியாக நடத்துநா் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து ந... மேலும் பார்க்க