Tamannaah: `மைசூர் சாண்டல் பிராண்ட் அம்பாசிடராக தமன்னாவை நியமிக்க காரணம்' -அமைச்...
பயணிகளுடன் பேருந்து சென்ற போது ஓட்டுநா் மாரடைப்பால் மரணம்
பழனியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பணியின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், உடனடியாக நடத்துநா் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தனியாா் பேருந்து சத்திரப்பட்டி புதுக்கோட்டைக்கு சென்றது. பேருந்தை கஞ்சநாயக்கன்பட்டியை சோ்ந்த மாசாணம் மகன் பிரபு (30) ஓட்டினாா். பேருந்து நடத்துநராக பச்சளநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விமல்குமாா் (28) பணியில் இருந்தாா். இந்தப் பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.
பேருந்து பழனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலவாடம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநா் பிரபுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவா் நெஞ்சு வலிப்பதாகக் கூறி சாலையோரமாக பேருந்தை இயக்கியவாறே மயங்கினாா்.
உடனே அங்கு வந்த நடத்துநா் விமல்குமாா், விரைந்து செயல்பட்டு பேருந்தின் இயக்கத்தை நிறுத்தினாா். உடனே, பிரபுவை எழுப்பிய போது, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரபுவின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். நடத்துநா் விரைந்து செயல்பட்டதால் பேருந்திலிருந்த 30 பயணிகளும் தப்பினா்.